பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

மாயா விநோதப் பரதேசி

போலவேதான் தனது மாமியார் முதலிய மற்ற எல்லோரும் இருப்பார்களோ என்ற கவலையும், அவர்களைப் பற்றி ஒர் இழிவான அபிப்பிராயமும் மனோன்மணியம்மாளினது மனதில் உண்டாயின. அவ்வாறு முற்றிலும் அநாகரிகமாகவும் தாறுமாறாகவும் நடந்து கொள்ளும் மனிஷியைத் திருத்தி அவளை நாற்காலியில் உட்காரச் செய்யும் வரையில் தான் நிற்பது சாத்தியம் இல்லாத காரியம் என்று நினைத்த மனோன்மணியம்மாள் தனக்குப் பக்கத்தில் இருந்த ஒரு நாற்காலியின் மீது மெதுவாக உட்கார்ந்தவளாய்க் கொடி முல்லையம்மாளை நோக்கி, “அம்மா! நீங்கள் நல்ல உயர்வான பட்டுப்புடவை கட்டிக் கொண்டு இருக்கிறீர்கள்; அதோடு தரையில் உட்கார்ந்து கொள்ளுகிறீர்களே, புடவை அழுக்கடைந்து அசுசியாய்ப் போய்விடாதா? மனிதர்கள் வந்தால் உட்கார்ந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தோடு தானே இத்தனை நாற்காலிகள் போட்டு வைத்திருக்கிறார்கள். இது வரையில் எத்தனையோ விருந்தாளிகள் இங்கே வந்திருக்கிறார்கள். யாரும் உங்களைப் போல இப்படித் தரையில் உட்கார்ந்ததே இல்லை. நீங்கள் ஒருவர்தான் இப்படிச் செய்தது. எங்களோடு சரி சமானமாக உட்கார்ந்து பேச உங்களுக்கு யோக்கியதை இல்லை என்று நினைத்துத் தரையில் உட்கார்ந்தீர்களா? நீங்கள் செய்வது நிரம்பவும் வேடிக்கையாக இருக்கிறதே!” என்றாள்.

அவள் வார்த்தைகளைக் குத்தலாக மதியாதவள் போலவும், நிரம்பவும் பெருந்தன்மையோடு நடப்பவள் போலவும் காட்டிக் கொண்ட கொடி முல்லையம்மாள் வேடிக்கையாகவும் இனிமையாகவும் புன்னகை செய்து, “அம்மா! நான் ஒரு சாதாரணக் குடியானவருடைய வீட்டில் பிறந்தவள். அவ்விடத்தில் ஆண் பிள்ளைகள் கூட நாற்காலியில் உட்கார்ந்து அறியார்கள். நான் புகுந்த இடத்திலும் நாற்காலியைப் பார்த்தறியேன். நான் பிறந்த இடத்திலும் சரி புகுந்த இடத்திலும் சரி, நான் எப்போதும் வீட்டுக் காரியங்களைச் செய்துகொண்டே இருப்பேன். உட்கார்ந்து கொள்வதற்கே எனக்குச் சந்தர்ப்பம் கிடைக்கிறதில்லை. தப்பித் தவறி உட்கார்ந்து கொண்டாலும் தரையில் தான் உட்கார்ந்து கொள்வேன். ஆகையால் நாற்காலியில் எப்படி உட்காருகிறதென்பதே எனக்குத் தெரியாது. முன் காலத்தில் காளிதாசர் என்று