பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

205

ஒருவர் இருந்தார் என்றும் அவர் ஒரு வேடிக்கை செய்தார் என்றும், என் பாட்டி ஒரு கதை சொல்லக் கேட்டிருக்கிறேன். அதை நீங்கள் புஸ்தகங்களில் படித்திருக்கலாம். ஒரு மகாராஜனுடைய மகளின் கருவத்தை அடக்க வேண்டும் என்று மந்திரி மகன், நுனிக்கிளையில் உட்கார்ந்து அடிக்கிளையை வெட்டிக் கொண்டிருந்த சுத்த மடையனான காளிதாசன் என்ற ஒர் ஆட்டிடையனைப் பிடித்துக் கொணர்ந்து வேஷம் போட்டு அந்த ராஜகுமாரியை அவனுக்குக் கட்டிக் கொடுத்து விட்டானாம். அவனோடு சயனக் கிரகத்துக்குப் போன ராஜகுமாரி அவனை நாற்காலியின் மேல் உட்காரச் சொன்னாளாம். நாற்காலியின் உபயோகம் என்ன என்பதே அவனுக்குத் தெரியாது. ஆகையால், அவன் அந்த நாற்காலியைத் தூக்கித் தன்னுடைய தலையின் மேல் வைத்துக் கொண்டு தரையில் உட்கார்ந்து கொண்டான் என்று என் பாட்டி கதை சொல்ல, நான் கேள்வியுற்றிருக்கிறேன். நீங்கள் என்னை நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளச் சொல்வதைக் கேட்க எனக்கு அந்தக் கதை ஞாபகத்துக்கு வருகிறது. மனிதர்களுக்கு எதெது பழக்கமோ, அது அவர்களுக்கு இன்பமாகத் தோன்றுகிறது. நீங்கள் நாற்காலியிலேயே உட்கார்ந்து பழகியவர்கள் ஆகையால் அதுவே உங்களுக்கு இயற்கையாகப் போய் விட்டது. அதுவே உங்களுக்குச் சுகமாக இருக்கிறது. அதை விட்டுத் தரையில் உட்காருவது கஷ்டமாகவும் அகெளரதையாகவும் தோன்றுகிறது. என் விஷயம் அதற்கு நேர் விரோதமாக இருக்கிறது. நானும் என்னைப் போன்ற மற்ற குடும்ப ஸ்திரீகளும் நாற்காலியில் உட்கார்ந்து பழகியதே இல்லை; தரையிலே தான் உட்கார்ந்து பழகி இருக்கிறோம். நாற்காலியில் உட்காருவது தொழுக்கட்டையில் மாட்டிக் கொள்வது போல எங்களுக்குத் தோன்றுகிறது. பூமா தேவியின் மடியாகிய தரையில் உட்கார்ந்து கொள்வதே எங்களுக்கு பிரம்மானந்தமாகவும், பெருமையாகவும் தோன்றுகிறது. நாற்காலியில் உட்காருவதைவிடத் தரையில் உட்காருவதில் பல அனுகூலங்கள் இருக்கின்றன. தரையில் உட்காருவதில் முதலில் பணச் செலவில்லை; இரண்டாவது விஷயம், வியாதி எதுவும் உண்டாக இடமில்லை. எங்கள் வீடுகளில் நாங்கள்