பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

மாயா விநோதப் பரதேசி

போய் கிடக்கின்றன. அதனால் அததன் பெருமை சிறுமை மாறுபட்டுப் போகுமா? ஒரு நாளும் இல்லை” என்று சிரித்துக் கொண்டே இனிமையாகக் கூறினாள்.

அந்த வார்த்தைகளைக் கேட்ட மனோன்மணியம்மாள் மிகுந்த வியப்பும் திகைப்பும் கொள்ளலானாள். பார்ப்பதற்கு வசீகரமாகவும் நாகரிகம் வாய்ந்தவளாகவும் தோன்றிய கொடிமுல்லையம்மாள் நாற்காலியில் உட்காராமல் கீழே உட்கார்ந்ததைக் கண்ட உடனே, அவள் படிக்காத முட்டாள் என்று மனோன்மணியம்மாள் நினைத்துக் கொண்டாள் அல்லவா. பிறகு, நாற்காலியில் உட்காருவதைவிடத் தரையில் உட்காருவதே சிறந்ததென்று கொடி முல்லையம்மாள் தனக்கு புத்திமதி கூறியதைக் கேட்கவே, மனோன்மணியம்மாள், “ஆகா! நம்முடைய தேசத்து ஜனங்கள் அநாகரிகர்களாகவும், அடிமைகளாகவும் இருப்பது தான் உத்தமமானது என்பதற்குப் பல காரணங்களையும் தெரிந்து கொண்டு, அதே துறையில் பிடிவாதமாகச் சென்று கொண்டிருக்கிறார்களே! இவர்களுடைய மூட புத்தி எப்போதுதான் தெளிவுபடுமோ. இவர்கள் மற்ற நாட்டாருக்குச் சமதையாக உயரும் காலம் எப்போதுதான் வருமோ” என்று தனக்குத் தானே எண்ணிக் கொண்டவளாய்க் கொடி முல்லையம்மாளைப் பார்த்து, “சரி; பிறகு உங்களுடைய இஷ்டம். நாற்காலியில் உட்காருவது வெள்ளைக்காரருடைய நாகரிகம் என்று நீங்கள் கருதுகிறதாகத் தெரிகிறது. நம்முடைய தேசத்தில் எப்போதும் தரையைத் தவிர உயர்வான மர ஆசனங்கள் இருந்ததே இல்லையா? நான் மன்னார்குடி முதலிய வெளியூர்களில் இருந்த காலத்தில் ஜனங்கள் விசிப்பலகைகளில் உட்காருவதைப் பார்த்திருக்கிறேனே. அது மாத்திரம் நல்லது தானா? விசிப்பலகை என்பது நாலைந்து பேர் சேர்ந்து உட்கார்ந்து கொள்ளும்படி பெரிதாக இருக்கிறது. நாற்காலி ஒவ்வொருவர் தனித்தனி உட்காரும்படி சிறிது சிறிதாக அமைக்கப்பட்டிருக்கிறது. பேதம் இவ்வளவுதானே. நாற்காலி என்றால், நீங்கள் பெரிய பூச்சாண்டியைக் கண்டு பயப்படுவது போலப் பேசுகிறீர்களே! இதனால் அவரவர்களுக்கு ஏற்படக்கூடிய மரியாதை குறைந்து போய் விடுமா? வெள்ளைக்காரர்களிடத்தில்