பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

மாயா விநோதப் பரதேசி

வேறல்ல. இது மரியாதைப் படுத்துகிறதா அவமரியாதைப்படுத்துகிறதா என்பதை நீங்களே எண்ணிப் பாருங்கள். மனிதருக்குள் பரஸ்பரம் அந்தரங்கமான மரியாதையும் அன்பும் இருக்க வேண்டுமே அன்றி, இந்த வெளிப்படையான காரியம் எல்லாம் மனசின் உண்மையான நிலைமையை ஒரு நாளும் காட்டாது. உண்மையில் அன்பும், மரியாதையும் இல்லாதவர்கள் கூட இந்தச் சாமான்களை எல்லாம் கொண்டு வந்து வைத்துப் பார்த்து விட்டுப் போகிறார்கள். அது தான் போகட்டும் என்றால், இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. இப்படி வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் முதலியவற்றைக் கொண்டு வருவது சுபக்குறி என்று நீங்கள் கருதுகிறீர்களே நம்முடைய தேசத்தில் நடக்கும் ஒவ்வொரு கலியாணத்திலும், அதன் சம்பந்தமாக மனிதர் ஒருவரை ஒருவர் பார்க்கும் போதும், வெற்றிலை, பாக்கு, மஞ்சள் முதலிய மங்கலக் குறிகளை வைத்தே காரியங்களை நடத்துகிறார்களே! அப்படியிருந்தும் சிலர் விஷயத்தில் அசுபமும், சண்டையும், பூசலும், துக்கமும், விபரீதங்களும் நேராமலா இருக்கின்றன. ஆகையால் இவைகள் எல்லாம் அர்த்தம் இல்லாத அநாவசியமான காரியங்கள் என்பது நிச்சயமான சங்கதி. ஏதோ பழைய வழக்கத்தை அனுசரித்து நீங்கள் இந்தச் சாமான்களை எல்லாம் கொண்டு வந்தீர்கள் ஆகையால், அதைப்பற்றிப் பாதகம் ஒன்றும் இல்லை. ஆனாலும் நீங்கள் கொண்டு வந்துள்ள சாமான்களில் எதுவும் இங்கே உபயோகப்படக் கூடியதாக இல்லை. வெற்றிலை பாக்கு மஞ்சள் குங்குமம் முதலியவைகளை எல்லாம் நான் உபயோகிக்கிறதே இல்லை. அவைகள் வேண்டும் என்ற ஒர் ஆவலும் என் மனசில் உண்டாகிறதில்லை. நமக்கு உண்மையில் தேவையில்லாத பொருட்களை எல்லாம் நாம் ஏன் விலை கொடுத்து வாங்க வேண்டும் என்பதும், அதனால் நம்முடைய செலவுகளை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுமே சந்தேகம். நீங்கள் கொண்டு வந்திருக்கும் ரவிக்கைத் துண்டுகள் நிரம்பவும் படாடோபமாகவும் சிவப்பு பச்சை முதலிய நிறங்களே மயமாக நிறைந்ததாகவும் தோன்றுகின்றன. நான் துல்லியமான சாதாரண வெள்ளை உடைகள் உடுத்துவதே வழக்கம். அதுவே