பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

219

ஆரோக்கியமானது என்பது என்னுடைய அபிப்பிராயம். ஆகையால் இந்த ரவிக்கைகளும் எனக்கு உபயோகப்படப் போகிறதில்லை. இவைகளைத் தவிர இந்தத் தட்டில் சில பழங்களும் இருக்கின்றன. அவைகளை நான் கையால் கூடத் தொடப் போகிறதில்லை. எங்கள் வீட்டில் இன்னம் பல வகைப்பட்ட ஏராளமான பழங்கள் கிடந்தழிகின்றன. அவைகளைச் சாப்பிட்டுச் சாப்பிட்டு, அருவருப்பு உண்டாகிவிட்டது. இப்போது இவைகளைக் கண்ணால் பார்த்தாலே வயிற்றில் அஜீரணம் உண்டாகும் போல் இருக்கிறது. இப்படிப்பட்ட நிலைமையில் இருக்கும் என்னிடம் நீங்கள் இந்தப் பொருள்களைக் கொண்டு வந்து வைப்பதால், என் மனசில் ஏதாவது சந்தோஷமாவது, பெருமையாவது உண்டாகப் போகிறதா என்று யோசித்துப் பாருங்கள். இதர நாடுகளில், இப்படிப்பட்ட சாமான்களை எல்லாம் கொண்டு போய் ஒருவரை ஒருவர் பார்க்கிற வழக்கமே இல்லை. மங்கலகரமான மஞ்சள், வெற்றிலை பாக்கு இவைகள் இல்லாமலே அங்கே கலியாணங்கள் நடக்கவில்லையா? புருஷன் பெண்ஜாதிகள் சந்தோஷமாகவும் மங்கலகரமாகவும் காலம் தள்ளவில்லையா? நம் நாட்டில் தான் இந்த அநாவசியமான வேஷங்கள் எல்லாம் நடைபெறுகின்றன” என்றாள். அவள் கூறிய வார்த்தைகள் விபரீதமாகத் தோன்றினாலும், வந்திருந்தவரிடம் அவள் குரோத புத்தியோடு நடந்து கொள்ளவில்லை என்பதும், அவர்களை அவமரியாதைப்படுத்த எண்ணவில்லை என்பதும் நன்றாகத் தெரிந்தன. ஆனாலும் அவளது மனப்போக்கும் கந்தசாமியின் மனப்போக்கும் ஒன்றுக்கொன்று சிறிதும் பொருந்தாது என்பது கோபாலசாமிக்கு நன்றாகத் தெரிந்தது. திகம்பரசாமியார், வேலாயுதம் பிள்ளை முதலியோர் பெண்ணின் குணாதிசயங்களை அறிந்து கொள்ளாமல் பட்டாபிராம பிள்ளையின் சிநேகம் ஒன்றை மாத்திரம் கருதி அந்தக் கலியாணத்தை நிச்சயித்து விட்டார்களோ என்றும், பெரியோர் சொல்லை மீறி நடந்தறியாத சற்புத்திரனான கந்தசாமி தன் மனதிற்குப் பிடிக்காத அந்தப் பெண்ணை எப்படிக் கலியாணம் செய்து கொள்வான் என்றும் கோபாலசாமி நினைத்துப் பலவாறு கவலைகொண்டு சஞ்சலம்