பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220

மாயா விநோதப் பரதேசி

அடைந்ததன்றி, மனோன்மணியின் குண விசேஷங்களை மேலும் அறிந்து கொள்ளப் பிரியப்படாதவனாய், தான் எப்படியாவது தந்திரம் செய்து அவ்விடத்தைவிட்டு வெளியில் போய்விட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். ஆனால், வந்து உட்கார்ந்த உடனே தான் எழுந்து அவ்விடத்தை விட்டுப்போக விரும்பினால், அது மனோன்மணியம்மாளின் மனதில் சந்தேகத்தை உண்டாக்குவது அன்றி, அவளது நடத்தை தனக்குப் பிடிக்காமையால் எழுந்து போய்விட்டதாகக் கந்தசாமியும் எண்ணிக் கொள்வான் என்று கோபாலசாமி நினைத்தான். அந்த முக்கியமான விஷயத்தில் கந்தசாமி தானாகவே எவ்விதமான முடிவிற்கும் வரவேண்டுமே அன்றி, அவனுக்குத் தான் எந்த வகையிலும் வழிகாட்டியாக நடந்து கொள்ளக் கூடாதென்று நினைத்த கோபாலசாமி எதையும் கவனியாதவன் போலத் தரையைப் பார்த்தபடி மேலும் சிறிதுநேரம் பொறுமையாகத் தனது ஆசனத்தில் உட்கார்ந்திருந்தான். மனோன்மணியம்மாள் கடைசியாகக் கூறிய வார்த்தைகளைக் கேட்ட கொடி முல்லையம்மாள் சிறிதும் மனவருத்தம் அடையாதவள் போலக் காட்டிக்கொண்டு சந்தோஷமாகவும் முகமலர்ச்சியோடும் பேசத்தொடங்கி, “நம்முடைய தேசத்தில் இதைப் போன்ற பைத்தியக்காரத்தனமான காரியங்கள் எத்தனையோ அனுசரிக்கப்படுகின்றன என்பது உண்மைதான். மனிதருக்கு மனிதர் உள்ளார்ந்த உண்மையான அன்பு வைப்பது முக்கியமே அன்றி, வெளிப்படையான இந்தக் காரியங்கள் எல்லாம் அர்த்தம் இல்லாதவை என்றும், இவைகளால் நம்முடைய செலவை நாம் அதிகரிக்கச் செய்கிறோம் என்றும் நீங்கள் சொல்வது ஒரு விஷயத்தில் உண்மை தான். ஆனால் நாம் இன்னம் ஆழ்ந்து யோசித்துப் பார்க்கப் போனால், நமக்கு இந்தச் சாமான்கள் எப்படித் தேவையில்லையோ, அது போல, மற்ற மனிதருடைய அன்புதான் எதற்காகத் தேவை? அதனால் நமக்கு ஏதாவது அனுகூலமாவது உபயோகமாவது உண்டா? ஒரு மனிதருக்கும் இன்னொரு மனிதருக்கும் சிநேகமாவது அன்பாவது வேண்டும் என்ற அவசியமே இல்லை. மனிதருக்குத் தேவையான பணம் இருந்துவிட்டால், அவர்களுடைய தேக