பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

223

தேசத்திலும் உள்ள பொருட்களையும் திரட்டிக் கொண்டு போய்த் தம்முடைய பட்டணத்தைக் குபேர பட்டணத்துக்குச் சமதையாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நகைகளை அணிவதில்லை; ஜரிகை ஆடைகள், நம்முடைய ஆடைகளைப் போன்ற பட்டாடைகள் முதலியவற்றை உபயோகிப்பதில்லை. அவர்களுடைய வீட்டில் இருக்கும் சாமான்களோ, பீங்கான் சாமான்கள், கண்ணாடி சாமான்கள், மரச் சாமான்கள் முதலியவை; அவர்கள் ஒவ்வொருவரும் லட்சம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். கல்யாணம் முதலிய சடங்குகளில் எல்லாம் அவர்களுக்கு அதிகச் செலவு கிடையாது. நம்மைப் போல இப்படிப்பட்ட அநாவசியச் செலவுகளையும் அவர்கள் செய்கிறதில்லை. ஆனால் அவர்கள் பதினாயிரம் இருபதினாயிரம் போட்டு மோட்டார் வண்டி வாங்குவார்கள். மாதம் ஆயிரக் கணக்கில் செலவு செய்து அற்புதமான சக்தி வாய்ந்த ஒயின் தினுசுகளைக் குடிப்பார்கள். அதன் பிறகும் மிச்சப்படும் பணத்தை சூதாடித் தோற்பார்கள். அவர்கள் உலகத்தை எல்லாம் கட்டியாளுவதால், அடிக்கடி பிற தேசங்களோடு யுத்தங்கள் விளைந்து விடும். அப்போது வெடிகுண்டுகள், நீர் முழுகிக் கப்பல்கள், ஆகாய விமானங்கள் முதலிய யுத்த தளவாடங்களைச் சேகரிக்க, இமாலய பர்வதத்தின் உயரம் குவிக்கப்பட்ட பொன் செலவு செய்வார்கள். தெய்வ லோகத்தில் சங்கநிதி பதுமநிதி என்ற நாணயங்கள் செலாவணியில் இருப்பது போல வெள்ளைக்காரர் தேசத்தில் தங்கப்பாளங்களும், வைரக் கட்டிகளும் நாணயமாக உபயோகிக்கப்பட்டால் அன்றி, அவர்களுடைய தேவைகளைத் தீர்ப்பது சாத்தியம் இல்லாத காரியமாக இருக்கிறது. ஆகையால் வெள்ளைக்காரர் வெற்றிலை பாக்கு மஞ்சள் பனரீஸ் ரவிக்கைத் துண்டு முதலியவற்றை உடயோகிக்கவில்லை என்பதில் இருந்தே நிரம்பவும் சிக்கனமாக நடக்கிறார்கள் என்றாவது, அவர்கள் சகலமான விஷயங்களிலும் மேதாவிகள் என்றாவது நாம் நினைத்துவிட முடியாது. அவர்கள் செய்வதை எல்லாம் நாமும் செய்ய வேண்டும் என்ற நியதியும் இல்லை. நம்முடைய தேசத்தில் இயற்கையிலேயே உண்டாவதும், நம்முடைய தேக ஆரோக்கியத்துக்கு உகந்ததும், முற்றிலும்