பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

227

கண்டு, நீங்கள் எங்களுக்குப் புத்தி கற்பித்தீர்களே, அப்போது என் மனசில் ஒரு சந்தேகம் உதித்தது. நீங்கள் ஒருவேளை எங்களுடைய வீட்டுக்கு வந்தால், அப்போது நாங்கள் உங்களுக்கு உபசரித்தால், அதைக்கூடத் தாங்கள் அவமரியாதைப் படுத்துவதாக நினைத்துக் கொள்வீர்களோ என்ற சந்தேகம் உதித்தது. ‘எங்கள் வீட்டில் பகஷணங்கள் இல்லையா? நாங்கள் சாப்பிடாமல் பட்டினியாகவா உங்கள் வீட்டுக்கு வருவோம்? எங்கள் வீட்டில் பகஷனங்கள் இல்லை என்று எண்ணிப் பேசுகிறீர்களா? அல்லது நாங்கள் பகஷனங்கள் சாப்பிடாதவர்கள் என்று நினைத்துப் பேசுகிறீர்களா? இது மரியாதைப்படுத்துகிறதா, அவமரியாதைப்படுத்துகிறதா என்று நீங்கள் ஒருவேளை கேட்பீர்களோ என்று நான் சந்தேகித்தேன். இப்போது நீங்கள் பலகாரம் சாப்பிடும்படி எங்களை உபசரித்ததில் இருந்து, நீங்கள் அப்படிச் செய்ய மாட்டீர்கள் என்பது நிச்சயமாகிறது. வெள்ளைக்காரர் நாகரிகத்தில் இந்த உபசரணைக்கு மாத்திரம் அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது போலும்! நல்ல வேளைதான். ஆனால், உங்களுடைய வீட்டுச் செலவு இதனால் அநாவசியமாக அதிகரிக்கிறதே என்ற கவலை தான் எனக்கு உண்டாகிறது. ஆனால் நாங்கள் உங்கள் வீட்டில் பலகாரம் சாப்பிடுவதால், உங்கள் வீட்டுச் செலவு அதிகரிக்கிறதானாலும், இந்த இரண்டாவது வேளைச் சிற்றுண்டிச் செலவு எங்கள் வீட்டில் லாபமாய் போகிறதல்லவா? ஆதாயமும் செலவும் சரியாய்ப் போகும். நாங்கள் கொண்டு வந்த சாமான்களின் விஷயம் அப்படிப்பட்டதல்ல. அது அநாவசியமானது தான். அவைகள் இல்லாமலேயே காரியம் நடந்து போகும். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஆனாலும், நாங்கள் இப்போது தான் ஆகாரம் பார்த்துக் கொண்டு வந்தோம். வயற்றில் கொஞ்சங்கூட இடமில்லை. நீங்கள் இவ்வளவு தூரம் உபசாரம் செய்ததைக் காண எங்கள் மனம் குளிர்ந்தது. உங்களுக்கு நேரமாகிறது. உங்களுக்கு மாத்திரம் பலகாரங்கள் தருவித்துச் சாப்பிடுங்கள். நாங்கள் இருப்பதைக் கருதி நீங்கள் அந்த வேலையை நிறுத்த வேண்டாம்” என்றான்.

அந்தச் சமயத்தில் மனோன்மணியம்மாளின் வேலைக்காரி தாம்பாளத்தில் இருந்த சாமான்களை எல்லாம் பக்கத்தில் இருந்த