பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

231

தனக்கருகில் வைக்கப்பட்டிருந்த பிஸ்கோத்தில் ஒன்றைத் தனது இடது கையில் எடுத்து வைத்துக் கொண்டாள். அவளுக்கு அதிக பசி உண்டாகி இருந்ததாகவாவது அல்லது அந்தப் பொருட்களை உண்ண அவள் நிரம்பவும் ஆவல் கொண்டதாகவாவது தோன்றவில்லை. அவள் பகற் போஜனம் உண்ட பிறகு நெடு நேரம் கழிந்து விட்டது. ஆகையாலும், அவள் ஓயாமல் படித்தும் உறங்கியும் இருந்தாள் ஆகையாலும், அவளது உடம்பில் ஒருவிதத் தளர்வும் சோம்பலும் மேலிட்டிருந்ததாகத் தென்பட்டதே அன்றி, கூர்மையான பசி இல்லாமல் இருந்தது. ஆகையால், அவள் வேண்டா வெறுப்பாய் அந்த வேலையைச் செய்ய எத்தனித்து, ஒரு பிஸ்கோத்தை மேற்சொன்னபடி எடுத்த வண்ணம் புன்னகை செய்த முகத்தினளாய்க் கொடி முல்லை யம்மாளை நோக்கி, “ஏனம்மா பிஸ்கோத் சாப்பிடுகிறீர்களா? இது நல்ல முதல்தரமானது. சீமையில் இருந்து பிரத்தியேகமாய்த் தருவிக்கப்பட்டது. அதிகமாய்ச் சாப்பிட வேண்டாம். ஒன்றே ஒன்று மாதிரி பாருங்களேன்” என்று அன்பாகக் கூறினாள். அவள் அந்தரங்க விசுவாசத்தோடு கூறிய மாதிரி கொடிமுல்லையம்மாளின் மனதில் ஒருவித இளக்கத்தை உண்டாக்கியது. மனோன்மணியம்மாள் இங்கிலீஷ் படிப்பினாலும் புதிய நாகரிகப் பற்றினாலும் எவ்வளவுதான் மாறுபட்டுப் போயிருந்தாலும், ஒவ்வொரு விஷயத்திலும் எவ்வளவுதான் குதர்க்கமாகப் பேசினாலும், அவளிடம் உள்ளும் புறமும் ஒத்த உறுதியான நடத்தையும், நிரம்பவும் லலிதமான குணமும் இருப்பது நன்றாகத் தெரிந்தது. ஆகவே கொடிமுல்லை அம்மாள் அவளது விஷயத்தில் ஒருவித அனுதாபம் அடைந்தாள். ஆனாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் மறைத்து, “அம்மா! எனக்கு வேண்டாம். உங்கள் காரியம் ஆகட்டும். நாங்கள் மத்தியான வேளைகளில் காப்பி பலகாரம் முதலிய வஸ்துக்கள் எதையும் சாப்பிடுகிற வழக்கமே இல்லை. தண்ணிர் விட்டு வைத்திருக்கும் பழைய சாதம் கொஞ்சம் சாப்பிடுகிறதே வழக்கம். அது தான் உடம்புக்கு ஒத்தாற் போல ஆரோக்கியமாக இருக்கிறது. மற்ற பதார்த்தங்கள் எல்லாம் வாய்க்கு ருசியாக இருந்தாலும் உடம்பை வெகு சீக்கிரத்தில் கெடுத்துவிடும். நான்