பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

7

கொளுத்திவிட்டால், அந்த இடத்தின் தனிமையும் பயங்கரத் தன்மையும் குறைந்து போகும் என்று நினைக்கிறேன்” என்றான்.

கோபாலசாமி:- ஆம். நீ சொல்வது வாஸ்தவம்தான். ஏன் இதோ பிரசிடென்சி காலேஜ் இருக்கிறதே. அதற்கு முன்பக்கம் எப்போதும் பொட்டல் வெளியாகத்தானே இருக்கிறது. அங்கே பூச்செடிகளையும் மரங்களையும் வைத்து அதை அழகான ஒரு பூங்காவாக மாற்ற, துரைத்தனத்தாருக்கு எவ்வளவு செலவு பிடிக்கப் போகிறது. லட்சக்கணக்கில் ரூபாய் பலவிதமாக அழிந்து போகின்றன. இந்த முக்கியமான சின்ன விஷயத்தில் துரைத் தனத்தார் சிக்கனம் பாராட்டுகிறார்கள். ஆனாலும், இதற்கு முன் நிர்மாநுஷ்யமாக இருந்த இடத்தில் இப்படிப்பட்ட கட்டிடங்களை உண்டாக்கி, இந்த இடத்தை இவ்வளவு வசீகரமாகச் செய்திருப்பது ஆச்சரியமான விஷயம் அல்லவா. அதைப்பற்றி நாம் வெள்ளைக்காரரை நிரம்பவும் மெச்ச வேண்டியது அவசியந்தானே. அவர்கள் அபாரமான புத்திவாய்ந்தவர்கள் என்பதைப்பற்றி கொஞ்சமும் சந்தேகமே இல்லை. அப்படி இல்லாமலா, இரண்டாயிரம் மையில் துரத்திற்கு அப்பால் உள்ள ஒரு சிறிய தீவிலிருந்து கொண்டே இவர்கள் நாமெல்லோரும் கிடுகிடென்று நடுங்கும்படி குரங்குகளைப் போல நம்மை ஆட்டி வைக்கிறார்கள். நாமும் மனிதர்கள் அவர்களும் மனிதர்கள் என்று சொல்ல முடியாது. நம்முடைய முன்னோர் புராணங்களில் கந்தருவர்கள் என்றும், சூரர்கள் என்றும் குறித்திருப்பது இவர்களைத்தான் என்ற எண்ணமே என் மனசில் உதிக்கிறது. நம்மால் செய்ய முடியாத எவ்வளவு அற்புதமான அரிய காரியங்களை இவர்கள் செய்கிறார்கள் பார்த்தாயா. உதாரணமாக, இந்த மின்சார சக்தியை வைத்துக் கொண்டு அவர்கள் எவ்வளவு அரிய பெரிய காரியங்களைச் சாதித்துக் கொள்ளுகிறார்கள் பார்த்தாயா? ஒரு பட்டணம் முழுதிலும் உள்ள விளக்குகள் எல்லாம் எண்ணெய் இல்லாமல் இந்த மின்சார சக்தியினால் எரிகின்றன. ஆஹா! மின்சார சக்தியொன்று இருக்கிறதென்று நம்முடைய முன்னோர்கள் கனவுகூடக் கண்டிருக்க மாட்டார்கள். ஒரு வேளை நம்முடைய முன்னோர்கள் மின்சார சக்தியைத்தான், யட்சணி தேவதை என்றும், மந்திர சக்தியென்றும் சொல்லி