பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

237

பதினாயிரம் ஜனங்களும் விழித்துக் கொண்டு அவர்களைத் துரத்தினாலும், திருடர்கள் தப்பி ஓடிப்போகிறார்கள். இதில் இருந்து சொற்பத் தொகையினரான திருடர்கள், பதினாயிரம் ஜனங்களைக் காட்டிலும் திறமைசாலிகள் என்று நாம் மதிக்கலாமா? அப்படித் திருட வருகிறவர்கள் சமயத்தில் வேலிகளைத் தாண்டலாம்; மதிர் சுவர்களைத் தாண்டலாம்; வீட்டிற்குள் இருக்கும் மாடுகளின் கால்களைக் கட்டி கூரையின் மேலேற்றி அலாக்காக வெளியில் கொண்டு வந்துவிடலாம்; ஒரே ஒட்டமாக இருபது முப்பது மைல் தூரம் ஒடலாம்; முள்களின் மேலும், பாம்புகளின் மேலும் அலட்சியமாகக் காலை வைத்துக் கொண்டு போகலாம்; இன்னம் இவைகளைப் போன்ற அநேக காரியங்களைச் செய்யலாம். இவைகளைக் கொண்டே நம்முடைய பதினாயிரம் மனிதரும் திறமையற்றவர்கள் என்று நாம் சொல்லிவிட முடியாது. அது போல, சொற்பத் தொகையினரான வெள்ளைக்காரர் அவ்வளவு துரத்தில் இருந்து வந்து நம்மை எல்லாம் அடக்கி ஆளுவதைக் கொண்டு நாம் திறமையற்ற பேடிகள் என்று மதிப்பது சரியல்ல; அதற்கு முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது; அவர்களுடைய வேதாந்த தத்துவமும் நம்முடைய வேதாந்த தத்துவமும் நேர் விரோதமானது. நாம் கடவுளின் சரியான தன்மையையும், மனிதர்கள் முதலிய சகலமான ஜீவராசிகளின் சிருஷ்டி ரகசியத்தையும், அவைகளுக்குள் இருக்கும் ஜீவாத்மாக்களுக்கும், கடவுளான பரமாத்மாவுக்கும் உள்ள சம்பந்தம் இன்னது என்பதையும் கரை கண்டிருக்கிறோம். உலக சிருஷ்டியே மாயை என்பதும், ஒரு சிலந்திப்பூச்சி தனது இச்சாமாத்திரத்தில் தனது வாயிலிருந்து நூலை உற்பத்தி செய்து ஒரு கூடிணத்தில் எப்படி ஒரு கூடாரம் கட்டிவிடுகிறதோ, அது போல பரமாத்மாவே, தம

அருள் ஒளியை எங்கும் வியாபிக்கச் செய்து, அது பலவகைப் பட்ட சிருஷ்டிப் பொருள்களாகத் தோன்றும்படி செய்திருக்கிறார் என்பதும் நம்முடைய கொள்கை. இந்த பூலோக சிருஷ்டியும், இவ்விடத்தில் காணப்படும் சிற்றின்ப சுகங்களும் நிலைத்தவை அல்ல என்பதும், இவைகளில் எல்லாம் நாம் நமது புத்தியையும் கவனத்தையும் செலுத்துவது வியர்த்தம் என்பதும், இவைகளின் பற்றைக் கூடியவரையில் குறைத்துக் கொண்டு, இறப்பு