பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

239

போருக்கு ஆயத்தமாக இருந்தவரே அன்று. பாரதப் போர் நடந்த காலத்தில், பஞ்ச பாண்டவர் தமது பாகத்திற்காக சண்டை போட நேர்ந்த காலத்தில் அர்ச்சுனன் பின்வாங்கியபோது கிருஷ்ண பகவான் பகவத் கீதையை உபதேசித்தது, ஆதிகாலத்திலிருந்து நம்மவருடைய மனப்போக்கு இந்த உலகப் பெருமையை நாடுவதல்ல என்பதை உறுதியாக மெய்ப்பிக்கும். சரியான தத்துவஞானம் இல்லாதவர்களும் மண்ணுலகப்பற்று ஒன்றையே நாடியவர்களுமான அன்னிய தேசத்து மன்னர்கள் நம்முடைய நாட்டின் மீது படை எடுத்து வந்து இதைப் பிடித்துக் கொள்ளத் தொடங்கிய பின்னரே நமது நாட்டில் போர்களும் அநர்த்தங்களும் உண்டாயின. எத்தனையோ அரசர்கள் தோன்றி அழிந்து போனார்கள். ராஜ்யத்தின் எல்லைகளில் எத்தனையோ மாறுபாடுகள் ஏற்பட்டன. இன்றையதினம் மொகலாயருடைய ராஜ்யமாக இருந்தது, நாளைய தினம் பிராஞ்சுக்காரருடையதாயிற்று; மறுதினம் இங்கிலீஷ்காரருடையதாயிற்று. பெயர் மாத்திரம் மாறியதே ஒழிய, ஜனங்களுடைய மனப்போக்கையும், தத்துவத்தையும் எவரும் மாற்ற முடியவில்லை. நம்மவர்கள் கண்டுபிடித்துள்ள தத்துவம் பரமாத்மாவின் குணங்கள் போல நிரந்தரமான உண்மை ஆகையால் அதற்கு ஒரு நாளும் அழிவு ஏற்படாது. இதர தேசத்தில் உள்ளோரும், நம்மிலும் நாகரிகம் அடைந்திருப்பதாய்ப் பெருமை பாராட்டிக் கொள்வோரும் உலகம் அநித்யம் என்ற தத்துவத்தை எந்தக் காலத்தில் கடைப்பிடிக்கிறார்களோ அப்போதுதான் உலகில் நிரந்தரமான கூேடிமமும் அமைதியும் ஏற்படும். அவர்களும் உண்மையில் நாகரிகம் வாய்ந்தவர் ஆவார்கள். அந்த விஷயத்தில் நம்முடைய இந்தியா தேசந்தான் மற்ற தேசங்களுக்கு குரு உபதேசம் செய்யும் பெருமையை அடையக் காத்திருக்கிறது. இதுவே உண்மையான பெருமை அன்றி இப்போது வெள்ளைக்காரர் நம்மை எல்லாம் அடக்கி ஆள்வது ஒரு பெருமையாகாது. இங்கிலீஷ்காரர்களுக்கு அவர்களுடைய தேசத்தில் அதிகமான விளைபொருள்களும் இல்லை. விலை உயர்ந்த செல்வங்களும் இல்லாதிருந்தன. அவர்கள் எப்போதும் கடலில் போய் மீன் பிடிப்பவராய் இருந்தவர்கள். இப்போதும் இங்கிலாந்து தேசத்து அரசனை