பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240

மாயா விநோதப் பரதேசி

வலையர்களின் அரசன் என்று ஹாசியமாகச் சொல்வது உண்டல்லவா? அவர்கள் ஆதிகாலத்தில் இருந்து ஊரைவிட்டுக் கடலில் போய்த் தமது ஆகாரங்களைத் தேடுவதையே தொழிலாகச் செய்து வந்தவர்கள். அவர்கள் இருக்கும் தீவுக்குப் பக்கத்தில் உள்ள கடலில் எப்போதும் புயல் காற்றும் அலைகளின் உக்கிரமும் நிரம்பவும் அதிகமாக இருப்பது வழக்கம். ஆதலால், அவர்கள் படகு முதலிய மரக்கலங்களை வரவர அபிவிருத்தி செய்து வருவது அத்யாவசியமாக இருந்தது. அனுபவம் ஏற்பட ஏற்பட, யோசனைக்கு மேல் யோசனை, யுக்திக்கு மேல் யுக்தி, தந்திரத்துக்கு மேல் தந்திரம் செய்து அவர்கள் தங்களுடைய படகுகளையும் கப்பல்களையும் அபிவிருத்தி செய்து கொண்டு போகப் போக, அவர்கள் முன்னிலும் அதிக தூரம் போகவும், கடலிலேயே பல நாள்கள் இருக்கவும் தக்க வசதிகள் செய்து கொண்டனர். அநேகமாய் எல்லோரும் அதே துறையில் வேலை செய்தனர் ஆதலால், ஏராளமான மரக்கலங்கள் ஏற்பட்டன. எல்லோரும் அவர்களது யுக்திக்கும் திறமைக்கும் தக்கபடி நடந்து பல திக்குகளிலும் சென்று பொருள்தேடத் தொடங்கினர். அவ்வாறு அவர்கள் சென்றதில் அவர்கள் அதற்குமுன் காணாத புதியபுதிய நாடுகளும் வஸ்துகளும் தென்பட்டன. அவர்கள் அவைகளை எளிதில் கைப்பற்றிக் கொண்டதன்றி அவ்வவ்விடங்களில் காணப்பட்ட அற்புதமான விலை உயர்ந்த புதிய புதிய வஸ்துக்களை எல்லாம் தமது தேசத்திற்குக் கொண்டு போய்ச் சேர்க்கத் தொடங்கியதோடு, இரத்தங் குடித்த புலிகள் போல புதிது புதிதான அன்னிய தேசங்களைக் காண்பதையும் அவ்வவ்விடத்தில் உள்ள பொருள்களைத் தமதாக்கிக் கொள்வதையுமே அவர்கள் தீராத பெருத்த தாகமாகக் கொண்டு மேன்மேலும் கப்பல்களை அபிவிருத்தி செய்து கொண்டு இந்த உலகம் முழுதிலும் பரவி, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா முதலிய பெருத்த கண்டங்களை எல்லாம் கண்டு பிடித்துக் கொண்டு குடியேறியும், அவற்றின் பெரும் பாகத்தைச் சொந்தமாக்கிக் கொண்டும் மற்றவைகளுடன் பலவகைப்பட்ட வியாபார சம்பந்தங்கள் வைத்துக் கொண்டும், தமது சொந்த நாட்டின் செல்வத்தை