பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

241

அபாரமாகப் பெருக்கிக் கொண்டும் மகோன்னத தசையில் இருந்து வருகிறார்கள். அவ்வாறு வெளி தேசத்தை நாடி வந்த அவர்கள் நம்முடைய இந்தியாவுக்கும் தற்செயலாக வந்தார்கள். இவ்விடத்தில் பற்பல மன்னர்களோடும் சிநேகம் செய்து தமது வியாபாரங்களுக்கு வேண்டிய வசதிகளை எல்லாம் ஸ்தாபித்துக் கொண்டு வேரூன்றி நிலைத்தபிறகு கரடகன் தமனகன் வேலை செய்து ஒன்றன்பின் ஒன்றாக நம்முடைய ராஜ்ஜியம் முழுதையும் கைப்பற்றிக் கொண்டார்கள். நம்முடைய இந்தியா பல மன்னர்களால் ஆளப்பட்ட விஸ்தாரமான தேசம் ஆதலால், ஒருவருக்கொருவர் குடுமி முடிந்துவிட ஏராளமான சந்தர்ப்பம் கிடைத்தது. அதோடு ஜனங்கள் யுத்தம் செய்யும் தன்மையுடைய மூர்க்கர்கள் அன்று ஆதலாலும், அவர்கள் ராமன் ஆண்டாலும், ராக்ஷசன் ஆண்டாலும் வித்தியாசம் இல்லை என்ற கொள்கை, மனத்திருப்தி முதலிய குணங்கள் நிறைந்தவர்கள் ஆதலாலும், இங்கிலிஷ்காரர்கள் அதிக சிரமம் இன்றி நம்முடைய தேசத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். அவர்களுடைய தத்துவம் கண்டது காட்சி கொண்டது கோலம் என்பது. அவர்களுக்கு இந்த உலக இன்பத்துக்கு மேலானதும் நிலைத்ததும் வேறொன்று இருக்கிறது என்ற எண்ணமே கிடையாது. உலகம் முழுதையும் கட்டி ஆள்வது ஒன்றே புருஷார்த்தம் என்பது அவர்களுடைய உறுதியான கொள்கை. இரண்டாயிரம் மைல் துரத்தில் இருந்து எல்லா நாடுகளையும் ஆண்டு, அவைகளோடு சம்பந்தம் வைத்துக் கொண்டிப்பதற்குத் தக்க ஏராளமான பல செளகரியங்களை அவர்கள் கண்டு பிடிப்பது அவசியம் ஆகிவிட்டது. அதற்காக அவர்கள் அரிதினும் அரிதான கப்பல்கள், தந்திப் போக்குவரத்துகள், ஆகாய விமானங்கள் முதலியவற்றை எங்கு பார்த்தாலும் நிரப்பி வைத்திருக்கிறார்கள். நம்முடைய இந்தியாவில் இமாசலம் முதல் கன்னியாகுமரி வரையில் ரயில்களும் தந்திகளும் ஏற்பட்டிருப்பதற்கு முக்கியமான கருத்து ஒன்று இருக்கிறது. முப்பத்து முக்கோடி ஜனங்கள் நிறைந்த விஸ்தாரமான இந்தத் தேசத்தை அடக்கி ஆள்வதற்கு அவர்கள் சொற்பமான சேனைகளையே சிற்சில இடங்களில் வைத்திருக்கிறார்கள். எங்கேயாவது ஒரு மூலையில் கலகம் நடந்தால் ஒரு கோடியில்


மா.வி.ப.I-17