பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

மாயாவிநோதப் பரதேசி

இருப்பார்களோ என்னவோ தெரியவில்லை. இதற்கு முன் கம்பிகள் மூலமாகத் தந்திகள் அனுப்பினார்கள். இப்போது கம்பி இல்லாமல், ஆகாயவெளியில் இரண்டாயிரம் மையிலுக்கப்பால் உள்ள அவர்களுடைய தேசத்தில் இருந்து செய்திகள் உடனுக்குடன் வருகின்றன. அதுவுமின்றி, இப்போது இன்னொரு புதுமையான ஏற்பாடும் செய்திருக்கிறார்கள். ஒருவர் ரூ.600 கொடுத்தால், அவருடைய வீட்டில், ஒரு கம்பத்தை நட்டு வேறு சில இயந்திரங்களை அவ்விடத்தில் வைக்கிறார்கள். அவைகளுக்குப் பக்கத்தில் மனிதர்கள் உட்கார்ந்து கொண்டிருந்தால், லண்டன், கல்கத்தா, பம்பாய் முதலிய இடங்களில் நடத்தப்படும் பாட்டுக் கச்சேரிகளில் பாடப்படும் பாட்டுகள் எல்லாம் இவ்விடத்தில் மனிதர் இருந்து பாடுவது போல உடனுக்குடன் அத்தனை ஜனங்களுக்கும் நன்றாகக் கேட்கின்றன. இது எப்படிப்பட்ட புதுமை பார்த்தாயா? அதற்கு இப்போது ரூ.600 தான் செலவு பிடிக்கிறது. காலக்கிரமத்தில் அது நிரம்பவும் குறைந்து நூறு, அல்லது, ஐம்பதுக்கு வந்து விடும். அந்த இயந்திரங்களை அநேகமாய் எல்லா வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம். அயலூர்களில் உள்ள மனிதர்களோடு உடனுக்குடன் பேசலாம். அங்கே நடக்கும் பாட்டுக் கச்சேரிகளை எல்லாம் எல்லோரும் கேட்கலாம். இன்னம் சொற்ப காலம் போனால், மனிதருடைய வடிவத்தை யந்திரத்தின் மூலமாய் நாம் உடனுக்குடன் பார்க்கும்படி செய்து, அவர்களோடு நேருக்கு நேர் பேசும்படி செய்வார்கள் என்பதைப்பற்றி சந்தேகமே இல்லை. அப்போது ஒருவருக்கொருவர் கடிதம் எழுத வேண்டிய அவசியமும் இல்லை, நேரில் ஊருக்குப் போய்ப் பார்க்க வேண்டிய அவசியமும் இல்லாமல் போய்விடும் என்று நினைக்கிறேன். அப்போது தபால் இலாகாவிலும், ரயில் இலாகாவிலும் வருமானம் அடியோடு குறைந்து போகும் என்பது நிச்சயம்.

கந்தசாமி:- ஆம். வாஸ்தவந்தான். இயந்திர வித்தைகள் அதிகமாய் உபயோகத்துக்கு வர வர, மனிதர்களுக்கு வேலையே இல்லாமல் போய்விடுவது சகஜந்தானே. வெள்ளைக்காரர்கள், செத்தவரைப் பிழைக்க வைக்கிற ரகசியம் ஒன்றைத் தவிர மற்ற எல்லா ரகசியங்களையும் கண்டுபிடித்துவிட்டார்கள்.