பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246

மாயா விநோதப் பரதேசி

ரயில், தந்தி முதலிய சில முக்கியமான வசதிகளை எல்லாம் ஏற்படுத்தி இருக்கிறார்கள். ராஜாங்க நிர்வாக விஷயத்திலும் நீதி செலுத்தும் விஷயத்திலும் அவர்கள் பல ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள். அவைகளினால் நமக்கு ஏராளமான பணச் செலவு ஏற்பட்டாலும், அவைகளால் உண்டாகும் நன்மையைக் கருதி அவைகளை மாத்திரம் நாம் ஏற்றுக் கொள்வதோடு நிற்க வேண்டுமே அன்றி, நம்முடைய தேசத்தில் உள்ள ஆண் பெண் பாலாராகிய எல்லோரும் அவர்களுடைய பாஷையைக் கற்று, அதையே எப்போதும் பேசி, அவர்களுடைய போஜனம், பழக்க வழக்கங்கள், மத தத்துவங்கள் முதலியவற்றை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கும் எவ்வித நியாயமும் இல்லை. அப்படிச் செய்ய முயற்சிப்போர் நம்முடைய நாட்டின் உண்மையையும் பெருமையையும் தூய்மையையும், நம்முடைய தேசத்தில் உள்ள நூல்களின் அருமையையும், நம்முடைய பழக்க வழக்கங்களின் மேன்மையையும், சிலாக்கியத்தையும் சரியானபடி உணராமல் செய்கிறார்கள் என்றே நினைக்க வேண்டும். அதெல்லாம் இருக்கட்டும். இப்போது நான் இங்கே வந்து உங்களைப் பார்த்து உங்களுடைய நடையுடை பாவனைகளைக் கவனித்தறிந்து பிறகு என் மனசில் சில சந்தேகங்கள் உண்டாகின்றன. அவைகளை உங்களிடம் கேட்க வேண்டும் என்ற ஓர் எண்ணம் உண்டாகிறது. ஆனாலும், வாய்விட்டுக் கேட்பதற்குக் கூச்சமாக இருக்கிறது. அதைப்பற்றி நீங்கள் ஒருவேளை மனவருத்தம் அடைவீர்களோ என்ற நினைவும் உண்டாகிறது. நீங்கள் அனுமதி கொடுத்தால், கேட்கிறேன்” என்றாள்.

அவ்வாறு கொடி முல்லையம்மாள் வெள்ளைக்காரரது நாகரிகத்தைத் தாழ்த்தியும், இந்திய நாகரிகத்தை சிலாகித்தும் பேசியது மனோன்மணியம்மாளின் மனதை ஒருவாறு புண்படுத்தி விட்டது. ஆனாலும், அதற்கு எவ்வித மறுமொழி அல்லது சமாதானம் சொல்வது என்பதை சிந்தித்தபடி தனது சிற்றுண்டியை முடித்துக் கொண்டு தனது இடையில் சொருகப் பட்டிருந்த ஒரு முழ நீள அகலம் உள்ள ஒரு பட்டுச் சவுக்கத்தை எடுத்துத் தனது கைவாய் முதலியவற்றை நன்றாகத் துடைத்துக்