பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

247

கொண்டு எழுந்து வந்து வேறொரு சோபாவின் மேல் உட்கார்ந்து கொண்டு, “உங்கள் மனசில் என்ன சந்தேகங்கள் உண்டாகின்றன? சொல்லுங்கள்” என்றாள்.

கொடி முல்லையம்மாள் புன்னகை செய்து நயமாகப் பேசத் தொடங்கி, “வேறொன்றும் இல்லை. நீங்கள் இப்போது பி.ஏ. பரீட்சைக்கு படித்துக் கொண்டிருக்கிறீர்களே! பரீட்சையில் தேறின பிறகு நீங்கள் ஏதாவது உத்தியோகம் வகிக்கப் போகிறீர்களா என்பது என்னுடைய முதல் சந்தேகம். உத்தியோகம் வகிக்கப் போகிறதில்லை என்றால், நீங்கள் கலியானம் செய்து கொண்டு புருஷன் வீட்டுக்குப் போன பிறகு இந்தப் பட்டத்தை எப்படி உபயோகப்படுத்தப் போகிறீர்கள் என்பது என்னுடைய இரண்டாவது சந்தேகம். தவிர, உங்களைப் பார்த்தால், எல்லா விஷயங்களிலும் வெள்ளைக்காரருடைய பழக்க வழக்கங்களை மெச்சி அவைகளைப் பின்பற்றி நடக்கிறவர்களாகத் தெரிகிறது. அவர்களுடைய தேசத்தில் கலியாணம் நிச்சயிக்கப்படுவதற்கு முன், மாப்பிள்ளை பெண் வீட்டிற்கு வரத்துப் போக்கு வைத்துக் கொண்டு, பெண் வீட்டாரோடும் பெண்ணோடும் நன்றாகப் பழகுவதும், பெண்ணும் மாப்பிள்ளையும் பல இடங்களுக்குத் தனிமையில் போய் வந்து ஒருவரது குணத்தை ஒருவர் உணர்ந்து, இருவரும் பரஸ்பரம் காதலை வளர்த்துக் கொள்வதும், அதன்பிறகு புருஷன் பெண்ணின் முன்னால் மண்டியிட்டுத் தனது காதலை வெளிப்படுத்தி, “நான் உன்னைக் காதலிக்கிறேன்; நீ என்னுடையவள் ஆகிறாயா?” என்பதும், அவள் தானும் அப்படியே அவனைக் காதலிப்பதாகக் கூறி அதற்கு இணங்குவதும், பிறகு அவர்கள் இருவரும் தங்களது முடிவை பெண் வீட்டாரிடம் தெரிவிப்பதும், அதை அவர்கள் ஏற்றுக் கொள்வதும், அதன்பிறகு அவர்கள் இருவரும் உண்மையில் புருஷன் பெண்ஜாதி ஆகிவிட்டவர்கள் போலவே நடந்து கொள்வதும், கோவிலில் மோதிரம் மாற்றிக் கொள்வது, கலியாணக் கணக்குப் புஸ்தகத்தில் பாதிரியாருக்கு முன்னால் இருவரும் கையெழுத்துச் செய்வது முதலிய கலியானச் சடங்குகளை அவர்கள் உடனேயோ, அல்லது, தங்களுடைய