பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254

மாயா விநோதப் பரதேசி

கொடி முல்லையம்மாள் கூறின சொற்கள் மனோன்மணியம்மாளின் செவிகளில் ஈட்டிகள் போலப் பாய்ந்து அவளது மனதைப் புண்படுத்தின. அவள் அடக்க இயலாத மனக் கொதிப்பும், கோபமும், அருவருப்பும், விசனமும், வியப்பும், மனக் கலக்கமும் அடைந்தவளாய் இரண்டொரு நிமிஷ நேரம் மெளனமாக இருந்தபின் பேசத் தொடங்கி, “நீங்கள் இங்கிலிஷ் காரருடைய நாகரிகத்தையும் நடையுடை பாவனைகளையும் பழக்கவழக்கங்களையும் தூவிப்பது போல என்னைப் பழித்து அவமதிக்க வேண்டும் என்ற கருத்தோடு இங்கே வந்ததாகவே நினைக்கிறேன். உங்களுக்குச் சரியாக நானும் பேசக்கூடும் ஆனாலும், அம்மாதிரி உங்களோடு பேச்சை வளர்த்திக் கொண்டிருக்க எனக்கு அவகாசமும் இல்லை, விருப்பமும் இல்லை. மிஸ்டர் கந்தசாமியும் பி.ஏ. பரீட்சையில் தேறி இருப்பதாலும், அவர்கள் தக்க பெரிய மனிதர்களாக இருப்பதாலும், அவர்கள் என்னை என் அந்தஸ்துக்குத் தக்கபடி கண்ணியமாகவும் மரியாதையாகவும் நடத்துவார்கள் என்று நினைத்தே நான் இந்தக் கலியானத்துக்கு இசைந்தேன். முதலில் நான் கலியாணம் செய்து கொள்ளவே ஆசைப்படவில்லை. என் தகப்பனாருடைய வற்புறுத்தலுக்கு இணங்கி, நான் அரை மனசோடு இதை ஏற்றுக் கொண்டேன். இப்போது நீங்கள் சொல்வதைப் பார்த்தால், நான் அவர்களுடைய வீட்டில் கேவலம் ஓர் அடிமைப்போல நடந்துகொள்ள வேண்டும் போலத் தோன்றுகிறது. அப்படி நான் என் சுயமதிப்பையும் மரியாதையையும் சுயேச்சையையும் இழந்து, புழுக்கைச்சி போல அவர்கள் வீட்டில் கிடந்து உழன்று புருஷ சுகம் அடைவதைக் காட்டிலும், சுயமதிப்போடும், சுயேச்சையோடும் இருந்து பட்டினி கிடந்து மரிப்பதே சிலாக்கியம் என்பது என்னுடைய உறுதியான அபிப்பிராயம். ஆயைால் நீங்கள் சொல்லுகிறபடி அவர்கள் என்னை நடத்துவார்கள் என்பது உண்மையானால், இந்தக் கலியாணத்திற்கு நான் பிரியப்பட வில்லை. தயை செய்து நீங்கள் உங்களுடைய மனிதருக்கு எழுதி இந்தக் கலியான ஏற்பாட்டை ரத்து செய்து விடும்படி செய்து