பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

233

விடுங்கள். நான் என் தகப்பனாரிடம் இதை எல்லாம் சொன்னால் அவர் நம்பமாட்டார். ஆகையால் நீங்களே இதை நிறுத்த ஏற்பாடு செய்து விடுங்கள்” என்றாள்.

அவ்வாறு அவள் கூறி முடிப்பதற்குள், அந்த அறையின் வாசலில் இருந்து ஒருவர், “மனோன்மணி இந்த மனிதர்கள் நம்மை ஏமாற்ற வந்த வேஷக்காரர்கள்; இவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டு, நீ உன் மனசைக் கலங்க விடாதே” என்று கூறிக் கொண்டே, கலெக்டர் பட்டாபிராம பிள்ளை அந்த அறைக்குள் நுழைந்தார். திடீரென்று அவர் அவ்வாறு கூறிக்கொண்டு வந்ததைக் கண்ட மனோன்மணியம்மாள் திடுக்கிட்டு வியப்படைந்ததோடு, அவர்கள் யாராக இருப்பார்கள் என்றும், என்ன கருத்தோடு தன்னிடம் வந்திருப்பார்கள் என்றும் பலவித சந்தேகங்களைக் கொண்டவளாய்த் தனது தந்தை மேலும் என்ன விபரம் சொல்லப் போகிறார் என்பதை ஆவலோடு எதிர்பார்த்து அவரது முகத்தை உற்று நோக்கினாள். கொடி முல்லையம்மாள் பட்டாபிராம பிள்ளை நான்கு மணிக்கு வருவார் என்று எதிர்பார்த்தாள். ஆனாலும், அவர் அவ்வாறு சந்தடியின்றி வந்து சிறிது நேரம் வாசற்படியில் இருந்து, தாம் சம்பாஷித்ததைக் கேட்டுக் கொண்டிருப்பார் என்றாவது, தாங்கள் வேஷம் போட்டுக் கொண்டிருப்பதை அவர் கண்டு கொள்வார் என்றாவது அவள் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை. ஆதலால், அவளது மனதில் பெருத்த திகிலும் குழப்பமும் தோன்றி வதைக்கத் தொடங்கின. தாங்கள் வேஷம் போட்டுக் கொண்டு வந்திருக்கிறோம் என்பதை அப்போதே நேரில் கச்சேரியிலிருந்து வருபவரான பட்டாபிராம பிள்ளை எப்படி அறிந்திருப்பார் என்ற சந்தேகம் தோன்றி மனதைக் கலக்கியது. ஒருகால் கோபாலசாமி தங்களுடைய உண்மையை வெளியிடும்படியான சந்தர்ப்பம் ஏதாவது நேர்ந்திருக்குமோ என்ற எண்ணம் உதித்தது. ஆனாலும், அப்படி நேர்ந்திருக்காது என்ற நினைவும் தோன்றியது. ஏனென்றால், கோபாலசாமி உண்மையைத் தெரிவித்திருந்தால், தான் கந்தசாமி என்பதை அவர் தெரிந்து கொண்டிருப்பார் ஆதலால், தான் அவர்களை ஏமாற்ற வந்தவன் என்பது போன்ற