பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

257

அவதூறு சொல்லி அவளது மனதைக் கலைத்து இந்தக் கலியானத்தை நிறுத்தவோ, அல்லது, பெண்ணுக்கு ஏதாவது கெடுதல் செய்யவோ அவர்கள் வந்திருக்கலாம் என்ற சந்தேகமே தோன்றுகிறது. நீங்கள் எச்சரிப்பாக நடந்து கொண்டு முடிவைக் கடிதத்தின் மூலம் எழுதுங்கள். -

வேலாயுதம் பிள்ளை.

என்று எழுதப்பட்டிருந்த தந்தியைப் படித்தவுடனே மனோன் மணியம்மாளுக்கு, அவர்கள் இந்தக் கலியாணத்தைத் தடுத்துவிட வேண்டும் என்று வந்த பகைவராகத்தான் இருக்க வேண்டும் என்ற நினைவே உண்டாயிற்று. கொடி முல்லையம்மாளாக வேஷந் தரித்திருந்த கந்தசாமியும் அந்தத் தந்தியின் விஷயத்தைத் தெரிந்து கொண்டான் ஆதலால், அவன் பெருத்த குழப்பமும் கவலையும் அடைந்தான். தாங்கள் வந்திருக்கும் விஷயத்தை டெலிபோன் மூலமாய் அறிந்து கொண்ட பட்டாபிராம பிள்ளை உடனே மன்னார்குடிக்குத் தந்தி அனுப்பி இருக்கிறார் என்றும் அவன் உடனே யூகித்துக் கொண்டான் ஆனாலும், தங்களது நிலைமை நிரம்பவும் விகாரப்பட்டுப் போனதையும், தான் கந்தசாமி என்பது அவருக்குத் தெரிந்து போகுமானால், அவர் தன்னைப்பற்றி நிரம்பவும் இழிவான அபிப்பிராயம் கொள்வார் என்பதையும் அவன் உணர்ந்து அளவற்ற கிலேசமடைந்து குன்றிப் போனான். கூடுமானால் கடைசி வரையில் தான் கந்தசாமி என்பதை வெளியிடாமல் எப்படியாவது தந்திரம் செய்து அவ்விடத்தில் இருந்து போய்விட வேண்டும் என்ற எண்ணமே அவனது மனதில் தோன்றியது. கீழே இருந்த கோபாலசாமி, வேலைக்காரப் பெண் முதலியோரது கதி என்னவாயிற்றோ என்றும், அவர்கள் எவ்விதமான வரலாற்றை வெளியிட்டார்களோ என்றும் அவன் நிரம்பவும் கவலையுற்றான்.

உடனே பட்டாபிராம பிள்ளை தமது புதல்வியை நோக்கிக் கண் ஜாடை காட்டி அழைக்க அவள் எழுந்து பட்டாபிராம பிள்ளை வாசற்படியண்டை நின்ற இடத்திற்குப் போய்ச் சேர்ந்து திரும்பிப் பார்த்து, “கொடி முல்லையம்மா! இங்கிலீஷ்காரருடைய நாகரிகத்தையும் செய்கைகளையும் இழிவாகப் பேசினாயே!

மா.வி.ப.I-18