பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

258

இப்போது பார்த்தாயா? இந்த டெலிபோனும் தந்தியும் எவ்வளவு பெருத்த உபகாரம் செய்தன என்பதை உணர்ந்தாயா? வெள்ளைக்காரர்கள் இப்படிப்பட்ட அற்புதமான யந்திரங்களைச் செய்து வைக்காவிட்டால், இந்தியர்கள் ஒருவரை ஒருவர் ஒரு நிமிஷத்தில் ஏமாற்றி வஞ்சகத்தில் அழுத்திவிட மாட்டார்களா! இறப்பு பிறப்பாகிய சக்கரத்தில் இருந்து விடுபட்டு பரமாத்மாவின் பாதத்தில் ஐக்கியம் அடைவதையே விரும்புகிறவர்களாகிய உங்களுடைய செய்கை எப்படி இருக்கிறதென்பதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்” என்று நிரம்பவும் குத்தமாகவும் ஏளனமாகவும் மொழிந்துவிட்டுத் தனது முகத்தை அப்பால் திருப்பிக் கொண்டாள்.

உடனே பட்டாபிராம பிள்ளை மனோன்மணியம்மாளை நோக்கி, “ஒகோ! அப்படியா இந்த அம்மாள் உன்னிடம் ஏதோ பெருத்த பிரசங்கம் செய்திருக்கிறாள் போலிருக்கிறது! இருக்கட்டும். இந்த அம்மாள் பெண் பிள்ளையாக இருப்பதால், நாம் எதையும் செய்வது சரியல்ல. கீழே இருந்த மனிதரை நான் கேட்டதற்கு அவர் சரியான தகவலே கொடுக்கவில்லை. இந்த அம்மாளும் உண்மையைச் சொல்லுவாள் என்று நான் நினைக்கவில்லை. நான் கச்சேரியில் இருந்து புறப்பட்டு வரும் முன் போலீசாருக்கு டெலிபோன் அனுப்பிவிட்டு வந்தேன். இன்னம் கொஞ்ச நேரத்தில் அவர்கள் இங்கே வந்துவிடுவார்கள். கீழே இருக்கும் ஆண்பிள்ளையை அவர்களிடம் ஒப்புவித்து விடுவோம். அவர்களே உண்மையைக் கண்டுபிடிக்கட்டும். அது வரையில் இந்த அம்மாள் இவ்விடத்திலேயே இருக்கட்டும். நாம் போவோம் வா” என்று கூறிய வண்ணம் மனோன்மணியம்மாளை அழைத்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியில் போய் அதன் கதவை மூடி வெளிப்பக்கத்தில் தாளிட்டுக் கொண்டு அப்பால் போய்விட்டார்.

அந்த அறையில் சிறை வைக்கப்பட்ட கந்தசாமியின் மன நிலைமையை யூகித்துக் கொள்வதே எளிதன்றி விஸ்தரித்துச் சொல்வது அசாத்தியமான விஷயமாகும். வெட்கம், துக்கம், அவமானம், இழிவு முதலிய உணர்ச்சிகள் அபாரமாக அவனது