பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

261

உடனே இடும்பன் சேர்வைகாரனும், சில ஆட்களுமாக முனைந்து கந்தசாமியைத் தூக்கிக் கொண்டு மேன்மாடத்தை விட்டுக் கீழே இறங்கி வந்து, பங்களாவின் முன்னால் ஆயத்தமாக நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் வண்டியில் அவனைப் படுக்க வைத்தனர். உடனே இடும்பன் சேர்வைகாரனும் மற்றும் சிலரும் அதில் ஏறிக்கொள்ள, வண்டி அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுக் கும்பகோணம் போகும் பாட்டையில் வாயுவேக மனோ வேகமாய்ப் பறக்கத் தொடங்கியது. பெண் வேஷம் தரித்திருந்த கந்தசாமியை மனோன்மணி என்று தவறாக எண்ணி இடும்பன் சேர்வைகாரன் அவனை அவ்வாறு கும்பகோணத்திற்கு எடுத்துக் கொண்டு போய்விட்டான்.

6-வது அதிகாரம்
பாம்பு கடி - சாமியார் மரணம்

திகம்பரசாமியாரைப் பாம்புகள் கடித்துவிட்டன என்ற செய்தி காட்டுத் தீ பரவுவது போல அதிதுரிதத்தில் மன்னார்குடிப் பட்டணம் முழுதும் பரவி, அதற்கு நாலா பக்கங்களிலும் இருந்த கிராமங்களுக்கும் எட்டியது. எவரும் சிறிதும் எதிர்பார்க்காத அந்த விபரீதச் செய்தியைக் கேட்ட ஜனங்கள் முற்றிலும் பிரமிப்பும் திகிலும் அடைந்து திடுக்கிட்டுப் போயினர். திகம்பரசாமியார் சகலமான அம்சங்களிலும் மற்ற சாதாரண ஜனங்களைவிட மேம்பட்ட அதிமாதுவடி சக்தி வாய்ந்த தெய்வீகப் புருஷர் என்ற அபிப்பிராயமே ஜனங்களது மனதில் நிலைத்து நாளுக்கு நாள் வேருன்றி வந்திருந்தது ஆகையால், சாதாரண மனிதருக்கு நேரக்கூடிய பாம்பு கடி முதலிய அருவருக்கத்தக்க அபாயங்கள், பரிசுத்த ஸ்வரூபியும், எக்காலத்திலும் திரிகரண சுத்தியாய்ப் பாவ வழியில் நடக்காதவருமான அந்த மகானுக்கு நேருமா என்ற ஐயமும் மலைப்பும் எல்லோரது மனதிலும் தோன்றி, அந்தச் செய்தி உண்மையானது தானோ, அல்லது, அவரது பகைவர் எவரேனும் கற்பனையாக வெளியிட்டுப் பரப்பிய பொய்யான வதந்தியாக இருக்குமோ என்ற சந்தேகத்தை உண்டாக்கின. திகம்பரசாமியார் ஆதியில் பெருத்த தனிகராய் இருந்து, தமது செல்வம் முழுதையும் ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும்