பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

263

தமக்குத் தெரிந்த மருந்துகளைப் பிரயோகிக்கவும் ஆவல் கொண்டு உள்ளே நுழையத் தொடங்கினர். அவ்வாறு வந்து கூடிய ஜனத்திரளின் தொகை பல்லாயிரக் கணக்கில் பெருகி விட்டது. ஆகையால், உட்புறத்தில் எல்லோரும் ஒரே காலத்தில் நுழைவது சிறிதும் சாத்திய மற்ற காரியமாகி விட்டது. திகம்பரசாமியாரைப் பார்க்க வேண்டும் என்ற தடுக்க இயலாத ஆவலில், பெரும்பாலோர் மதில் சுவரின் மீது ஏறி உள்ளே குதித்தனர். மற்றவர் பங்களாவின் முன்புறத்தில் இருந்த இரும்புக் கதவுகளின் மேல் விழுந்து தள்ளவே, கதவுகள் சுவரோடு பெயர்ந்து விழுந்து விட்டன. அந்தப் பங்களாவின் வாசலில் எப்போதும் காவலாகவும், சாமியாரினது குற்றேவல்களைப் புரியவும் இருந்து வந்த ஐந்தாறு போலீஸ் ஜெவான்கள் ஜனங்கள் உள்ளே வராமல் தடுத்து வெளியிலேயே இருக்கும்படி செய்யத் திறமையற்றவராய்க் கடைசியில் டெலிபோன் மூலமாக அந்த ஊர்ப் போலீஸ் ஸ்டேஷனுக்குச் செய்தி அனுப்ப, கத்தி துப்பாக்கி முதலிய ஆயுதங்களோடு மேலும் பதினைந்து ஜெவான்களும் ஒரு சப் இன்ஸ்பெக்டரும் அங்கே தோன்றி ஜனங்களைக் கண்டித்தும் தடுத்தும் எல்லோரையும் வெளியிலேயே நிற்கச் செய்வதும் பகீரதப் பிரயத்தனமாக முடிந்தது. பங்களாவின் உட்புறத்தில் சாமியார் படுக்க வைக்கப்பட்டிருந்த விடுதியின் கதவு மூடப்பட்டிருந்தது. அவருக்கருகில், பிரபலமான பல இங்கிலீஷ் வைத்தியர்களும், நாட்டு வைத்தியர்களும், மாந்திரீகர்களும் கூடி அவருக்குரிய சிகிச்சைகளைச் செய்து கொண்டிருப்பதாகவும், சாமியார் ஸ்மரணை தப்பி ஒரே மயக்கமாய்ப் படுத்திருப்பதாகவும், அவரது நிலைமையில் எவ்வித குணமும் தெரியவில்லை என்றும், அவர் பிழைப்பது சந்தேகம் என்றும் போலீசார் ஜனங்களுக்கு அப்போதைக் கப்போது தகவல் தெரிவித்துக் கொண்டிருந்தனர். அந்த விவரங்களைத் தெரிந்து கொண்ட ஜனங்கள் மிகுந்த கவலையும், கலக்கமும் அடைந்து கடவுளைத் தொழுவோரும், பலவிதமான மருந்துகளைச் சொல்வோருமாய், இருக்கை கொள்ளாமல் துடிதுடித்து நின்றனர்.