பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

265

கூறலாயினர். அவ்விடத்தில் இருந்த ஒரு கிழவன், “ஆமா இந்த இங்கிலீஷ் வைத்தியர் பாம்பு கடிக்கு என்ன மருந்தைக் கொடுக்கப் போகிறார். அவர்கள் ஆடுகள் வெட்டுவது போல மனிதருடைய உடம்புகளை வெட்டி ஒட்டு வேலைகள் செய்வதில் திறமை சாலிகள்தான். அவர்களிடம் பாம்பு கடி, குஷ்டம், கூடியம், நீர் ரோகம், யானைக்கால், குன்மம் முதலிய வியாதிகளுக்கு மருந்தே இல்லையே. இந்த அபாயகரமான சமயத்தில் இங்கிலீஷ் வைத்தியரான புஜங்கராயரையும் அஜங்கராயரையும் கூப்பிட்டுக் கொண்டிருந்தால், நோயாளியை நாமே கொன்ற பாவம் வந்து லபிப்பது நிச்சயம்” என்று நிரம்பவும் அலட்சியமாக அபிப்பிராயம் கூறினான்.

அதைக் கேட்ட இன்னொரு மனிதன் முன்னவனைக் காட்டிலும் அதிக புரளியாகப் பேசத்தொடங்கி, “ஏன் ஐயா அப்படிச் சொல்லுகிறீர்? இங்கிலிஷ் வைத்தியர்கள் பாம்புகடி முதலிய பிணிகளுக்கு வைத்தியம் செய்வதில்லையா என்ன? மந்திரம் கால், மதி முக்கால் என்கிறபடி, அவர்களிடம் நல்ல மருந்துகள் இல்லாவிட்டாலும், சமயோசிதமான தந்திரங்கள் அதிகமாக உண்டு. பாம்பு கடித்த உடனே, அந்த இடத்தை நெருப்பைக் கொண்டு தீய்த்து விடுவார்கள், அல்லது, அந்த இடத்திலேயே வெட்டி எறிந்து விடுவார்கள். விஷம் உடம்பில் பரவாமல் தடுக்கப்பட்டுப் போகும். அதுவும் நல்ல சிகிச்சை தானே” என்றார்.

அதைக் கேட்ட பலர் “பலே பலே” என்று கைகொட்டி நகைத்தனர். இன்னொருவன் பேசத் தொடங்கி, “ஆம், ஐயா! பாம்பு கடித்து கால் நாழிகைக்குள் விஷம் உடம்பு முழுதும் பரவி தலைக்கேறி விடுமே; அதற்குள், மனிதன் டாக்டரைத் தேடி, நெருப்பைத் தேடி, கத்தியைத் தேடி விஷத்தைத் தடுப்ப தென்றால் அது சாத்தியமான காரியமா? பாம்பு கடித்து கொஞ்சம் காலதாமதமாய்விட்டால், அவர்களுடைய சிகிச்சை உபயோக மற்றதாகி விடுகிறது. பாம்பு கழுத்து, முகம், வயிறு, முதலிய இடங்களில் கடித்து விட்டால், அந்த இடங்களை அறுத்து எறிவதுதான் சாத்தியமான விஷயமா? வைத்தியம் என்றால்