பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

267

சப் இன்ஸ்பெக்டர், “நம்முடைய வைத்தியத்திலும், விக்கலுக்கு மருந்திருப்பதாகத் தெரியவில்லை” என்றார்.

கும்பலில் இருந்த இன்னொருவன், “சப் இன்ஸ்பெக்டர் ஐயா எந்த வைத்தியப் புஸ்தகத்தைப் படித்து இப்படிச் சொல்லுகிறாரோ தெரியவில்லை. விக்கல் மருந்தைப்பற்றி சொல்லப் பட்டுள்ள கவி குழந்தைக்குக்கூடத் தெரியுமே.

“எட்டுத் திப்பிலி ஈரைந்து சீரகம்
கட்டுத் தேனில் கலந்துண்ண விக்கலும்
விட்டுப் போகும்; விடாவிடில் புஸ்தகம்
சுட்டுப் போடும்; சொன்னேனிது சத்தியம்”

என்ற பாட்டை இப்போதாவது இன்ஸ்பெக்டர் ஐயா பாடம் செய்து கொள்ளட்டும்” என்று பலத்த குரலில் கூறிவிட்டு கும்பலில் மறைந்து கொண்டான்.

அதைக் கேட்ட மற்ற ஜனங்கள் இங்கிலீஷ் வைத்தியத்தைப் பற்றி ஒருவித இழிவான அபிப்பிராயமும், நமது நாட்டு வைத்தியத்தைப் பற்றி மேலான அபிப்பிராயமும், தற்பெருமையும், உற்சாகமும் கொண்டு, தாம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டரோடு, பேசுகிறோம் என்ற எண்ணத்தையும் மறந்து மூலைக் கொருவராய்த் தாறுமாறாகப் பேசத் தொடங்கினர்.

ஒரு மனிதன், “ஐயா! இந்த இங்கிலீஷ் வைத்தியரை முதலில் அனுப்பிவிட்டு, இதோ வலங்கைமானுக்குப் பக்கத்தில் உள்ள பாடாச்சேரியில் இருக்கும் அம்பட்ட மூக்கனை அழைத்துக் கொண்டு வாருங்கள். அவனிடம் ஒரு வேர் இருக்கிறது. அதை வேப்பெண்ணெயில் இழைத்து நாக்கில் தடவின மறு நிமிஷம் பாம்பின் விஷம் எல்லாம் பறந்து போகும் என்றான்.

இன்னொருவன், “ஏன் அவ்வளவு தூரம் போக வேண்டும். இதோ கோட்டுருக்குப் பக்கத்தில் பனையூர் என்று ஒர் ஊர் இருக்கிறது. அங்கே காளி கோவில் பூசாரி ஒருவன் இருக்கிறான். அவனை அழைத்துக் கொண்டு வாருங்கள். அவன் விபூதியை எடுத்து தலையில் இருந்து கால் வரையில் 3 தடவை தடவி விட்டால் உடனே விஷம் இறங்கிப் போகும். அவன்