பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

269

அவசரத்துக்கு அகப்படக்கூடியவைகளாகவே தோன்றவில்லை” என்றார்.

வேறொருவன், “அவைகள் எல்லாம் அகப்படாவிட்டால், கடையில் கிடைக்கக்கூடிய மயில் துத்தத்தை வாங்கிப் பொடி செய்து மூக்கால் இழுக்கச் செய்யுங்கள். அதோடு சாமியாருடைய தலையில் ஜலத்தை விட்டுக்கொண்டே இருக்கச் சொல்லுங்கள். அவர் குளிர்கிறதென்று சொல்லுகிற வரையில், ஜலத்தை விட்டுக் கொண்டிருக்க வேண்டும்” என்றான்.

சிறிது தூரத்தில் நின்ற வேறொருவன் ஓங்கிய குரலாகப் பெசத் தொடங்கி, “அதெல்லாம் ஒன்றும் வேண்டாமையா! நான் சொல்வது இன்னும் சுலபமானது. நம்முடைய புகையிலை இருக்கிறதல்லவா. அது பச்சைப் புகையிலையாகக் கிடைக்குமானால், அது நிரம்பவும் சிலாக்கியமானது. அதன் சாறைப் பிழிந்து அரைக்கால் படி அல்லது வீசம்படி குடிக்கும்படி செய்யுங்கள்; உடனே வாந்தி உண்டாகும். விஷம் எல்லாம் வெகு சீக்கிரத்தில் பிரிந்து வெளிப்பட்டுவிடும். பச்சைப் புகையிலை அகப்படாவிட்டால், காய்ந்த புகையிலையைத் தண்ணி விட்டுச் சாறு பிழிந்து கொஞ்சம் வேப்ப எண்ணெய் கலந்து உள்ளுக்குக் கொடுத்தால், அதுவே போதுமானது” என்றான்.

அவனுக்குப் பக்கத்தில் இருந்த மற்றொருவன், “அதுகூட முரட்டு வைத்தியம்; வேறொன்றும் வேண்டாம். பெருங்காயம், உள்ளிப் பூண்டு, அரிதாரம், மிளகு, இந்துப்பு இவைகளைச் சமமாகச் சேர்த்து அரைத்துக் குளிகையாக்கி முலைப்பால் விட்டுக் கண்ணில் கலிக்கம் போட்டால், விஷம் எல்லாம் ஒரு நிமிஷத்தில் நிவர்த்தியாகி விடும். வேறு மருந்தே தேவையில்லை” என்றான்.

இப்படி ஜனங்கள் மழை பெய்வது போல மருந்து வகைகளையும் உண்ணும் முறைகளையும் சொல்லிக்கொண்டே போனதன்றி, ஒவ்வொருவரும் உள்ளே சென்று தத்தம் வைத்திய முறைகளைக் கையாள வேண்டும் என்ற ஆவலினால் தூண்டப்பட்டுத் துடிதுடித்து முன்னுக்கு வந்தனர்.