பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270

மாயா விநோதப் பரதேசி

அவற்றை எல்லாம் கேட்டபடி சிறிது நேரம் அவ்விடத்தில் நின்ற பிறகு கண்ணப்பா வடிவாம்பாளை அழைத்துக் கொண்டு பங்களாவிற்குள் நுழைந்தான். வேலாயுதம் பிள்ளையின் குடும்பத்தாருக்கும் திகம்பர சாமியாருக்கும் அன்னியோன்னியமான நட்பு உண்டென்பது போலீஸ் ஜெவான்கள் எல்லோருக்கும் நன்கு தெரிந்த விஷயம் ஆதலால், கண்ணப்பாவும் அவனது மனையாட்டியும் உள்ளே செல்வதை எவரும் தடுக்காமல், அவர்களை மரியாதையோடு உட்புறம் அனுப்பினர். .

உள்ளே சென்ற அவ்விருவரது மனமெய்களின் நிலைமை விவரிப்பதற்கு முற்றிலும் அரிதாக இருந்தது. சட்டைநாத பிள்ளை என்ற பெரிய கொடிய காட்டு விலங்கின் பயங்கரமான குகைக்குள் அகப்பட்டு, வேறு எவராலும் மீட்க இயலாத பரம சங்கடமான நிலைமையில் இருந்த பெண்மானான வடிவாம்பாளை, அரும்பாடுபட்டு அற்புதச் செயல்களை முடித்து விடுவிக்கவும், அவளைக் கண்ணப்பா மணக்கவும் காரண பூதராக இருந்த திகம்பர சாமியாரை அவர்கள் இருவரும் சதா காலமும் வாழ்த்தி, தெய்வம் போல மதித்து வணங்கி, அவரது விஷயத்தில் அளவற்ற பயபக்தி விசுவாசத்தை வளர்த்து வந்தவர்கள் ஆதலால், அத்தகைய உயிருக்குயிரான மனிதர் இறந்துபோகப் போகிறார் என்ற செய்தியானது, அவர்களைக் கட்டுக்கடங்காது தத்தளிக்கச் செய்து, அவர்களது உயிரை முற்றிலும் ஆட்டிவிட்டது. அந்த விபரீதமான சந்தர்ப்பத்தில் தாம் என்ன செய்வது என்பதையும், அவரை எப்படிப் பிழைக்கச் செய்வதென்பதையும் சிறிதும் உணரமாட்டாதவராய், சித்தப்பிரமை கொண்டு மதிமயக்கம் அடைந்து பைத்தியக் காரர்களைப் போல மருள மருள விழித்துக் கொண்டே உள்ளே நடந்தனர். வெளியில் நின்ற ஜனங்கள் பாம்பு கடியை வெகு சுலபமாக மதித்து, அதற்குப் பல மருந்துகளைச் சொன்னார்கள்{rule}} குறிப்பு:- இந்தப் பக்கங்களில் சொல்லப்பட்டுள்ள பாம்புகடி மருந்துகள் எல்லாம் உண்மையிலேயே பலிக்கக்கூடிய மருந்துகள்; பொதுஜனங்களுக்குப் பயன்படுமாறு சமயோசிதமாகக் கதையில் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றன.