பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

11

நம்முடைய பெரியோர்கள் கண்டுபிடித்திருக்கும் தத்துவங்களை எல்லாம் இனி நாம் குப்பையில் போட வேண்டியதாகத்தானே முடியும். தேகக்கருவிகளின் வலுவினால் மனிதன் சிரஞ்சீவியாகி விடுவான் ஆனால், மனிதனுக்குள் ஜீவாத்மா என்று ஒன்று இருக்கிறது என்பது பொய்யாகி விடுகிறதல்லவா.

கோபாலசாமி:- ஏன் பொய்யாகிறது? நம்முடைய முன்னோர் அப்படி ஒன்றும் முடிவாகச் சொல்லக் காணோமே. பொதுவாக ஜீவராசிகள் தங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள காலவரம்பிற்கு அதிகமாக இருக்க முடியாதென்றால், அது பல விஷயங்களை அடக்கியதாக இருக்கிறது. ஒரு குழந்தை பிறக்கிறது. ஆரம்பத்தில் அதற்கு ஏற்படும் தேகவலு, அதன் தாய் தகப்பன்மாருடைய தேக மனோ பலங்களையும், அவர்களுடைய சுக செளகரியங்களையும் பொருத்ததாக இருக்கிறது. அதன் பிறகு அது வளரும் போது அதற்குக் கிடைக்கும் தேக போஷணை, செல்வாக்கு, அதன் தேக உழைப்பு, பழக்கவழக்கங்கள் முதலியவற்றால் அதன் ஆரோக்கியம், பலாபலம், ஆயிசு முதலியவை அமைகின்றன. மனிதருடைய பிறப்பு, செல்வம், சுகம் முதலிய அம்சங்கள் எல்லாம், பூர்வஜென்ம சுகிருதத்தால் உண்டாகின்றன. ஆகையால், அவற்றர்ல் நிர்ணயிக்கப்படும் தேக ஆரோக்கியம், ஆயிசு முதலியவைகளையும் பூர்வ ஜென்ம கர்ம பலன் என்று சொல்லி விடுகிறார்கள். நம்முடைய ரிஷிகள் யோகாப் பியாசம் செய்து தங்களுடைய ஆயிசை நூற்றுக் கணக்காக வளர்த்திக் கொண்டதாகக் கேள்வியுறுகிறோம். நம்முடைய சாஸ்திரங்களில் ஆயிசு விருத்திக்காக ஹோமங்கள், பிராயச்சித்தங்கள், தாதுபுஷ்டி மருந்துகள் முதலியவைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதுவுமன்றி தேவாமிருதமென்று ஒரு வஸ்து இருப்பதாகவும், அதை உண்போர் மூப்பு, பிணியின்றி என்றும் சிரஞ்சீவியாக இருப்பதாகவும் படித்திருக்கிறோம் அல்லவா ஜீவாத்மா, பூர்வ ஜென்ம கர்மா முதலிய விஷயங்கள் சொல்லப் பட்டிருக்கும் அதே சாஸ்திரங்கள் தானே இந்த விஷயங்களையும் சொல்லி இருக்கின்றன. ஆகையால் நாம் இரண்டையும் நிஜமாகவே நம்ப வேண்டியது தான். இவை ஒன்றுக் கொன்று முரண்படுவதாக நினைப்பது சரியல்ல.