பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

மாயா விநோதப் பரதேசி

இன்னான் என்பதைக் கண்டுகொண்டு, யாதொரு தடையும் செய்யாது அவர்கள் இருவரையும் நேராக உள்ளே போக அனுமதித்தனர். திகம்பரசாமியார் அந்த பங்களாக் கட்டிடத்தின் நடுமத்தியில் பல அறைகளுக்குள் அறையாக அமைந்திருந்த அந்தரங்கமான ஒரு விடுதியிலேயே எப்போதும் இருப்பது வழக்கம் என்பது கண்ணப்பாவுக்குத் தெரிந்த விஷயம் ஆதலால், அவ்விடத்திலே தான் அவர் இருக்க வேண்டும் என்று அவன் அனுமானித்துக் கொண்டான். ஆனாலும், அவன் போலீசாரை நோக்கி, “ஐயா! சாமியார் எந்த இடத்தில் படுத்திருக்கிறார்?” என்று வினவினான்.

ஒரு போலீஸ்காரன், “அவர் எப்போதும் இருந்து அலுவல் பார்க்கும் அறையிலேதான் இருக்கிறார்; நீங்கள் நேராக அங்கே போகலாம்” என்றான்.

கண்ணப்பா, “அங்கே வேறே மனிதர் யார் யார் இருக்கிறார்கள்? இப்போது அவருடைய நிலைமை எப்படி இருக்கிறது?” என்றான்.

போலீஸ்காரன், “அந்த அறைக்குள் அவருடைய சம்சாரமும் வேலைக்காரியும் நிரம்பவும் திறமைசாலிகளான நாலைந்து வைத்தியர்களும் மந்திரவாதிகளும் இருக்கிறார்களாம். அவருடைய வேலைக்காரிதான் அடிக்கடி வெளியில் வந்து அவருடைய நிலைமை எப்படி இருக்கிறதென்ற விவரங்களை எங்களுக்குத் தெரிவித்துவிட்டுப் போகிறாள். கடைசியாக அவள் இப்போதைக்குக் கால் நாழிகைக்கு முன்னேதான் வந்து நாங்கள் கடையில் இருந்து வாங்கி வந்த சில மருந்து சாமான்களை உள்ளே எடுத்துக் கொண்டு போனாள். வைத்தியர்கள் நிரம்பவும் பிரயாசைப்பட்டுப் பலவிதமான சிகிச்சைகளும் தந்திரங்களும் செய்கிறார்களாம். சாமியார் முற்றிலும் பிரக்ஞை இல்லாமல் கிடக்கிறாராம். அவர் பிழைத்தால், அது புனர்ஜென்மம் என்று வைத்தியர்கள் எல்லோரும் சொல்லுகிறார்களாம். என்ன செய்கிறது. இந்தக் கலிகாலத்தில் கிடைத்த அருமையான உத்தம புருஷருக்கு இப்படிப்பட்ட எதிர்பார்க்காத கொடுமை சம்பவித்திருக்கிறது. என்னவோ தெய்வந்தான் அந்த உத்தமியின் மாங்கலியத்தைக்