பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

281

இவன் தன்னுடையது என்று தப்பாக உரிமை கொண்டாடி, அது போவதைப் பற்றி விசனப்படுவது அவனுடைய தவறேயன்றி வேறல்ல. அவனிடம் கடவுள் இரக்கங் கொள்ளவில்லை என்று நினைப்பதே தவறு. ஒரு ஸ்திரீ தன் தகப்பன் இறப்பதைப் பற்றி வருத்தப்பட்டு அழுவதற்கு என்ன நியாயம் இருக்கிறது? தகப்பனுடைய தேகத்தை அவள் உற்பத்தி செய்தாளா? அவளுக்கு அந்தத் தேகத்தில் உள்ள உரிமையைவிட, அவன் உண்டு வந்த அரிசி, உப்பு முதலியவைகளுக்கே அவனுடைய தேகத்தில் அதிக பாந்தவ்வியமும் உரிமையும் உண்டு என்று நினைப்பதே நிரம்பவும் பொருத்தமானது. அப்படி இருக்க, இந்த உடம்பைப்பற்றி நாம் கவலைப்படுவதே அநாவசியம். மனிதன் சாதாரணமாகத் தனது உடம்புக்கு ஏற்படும் பசி தாகம் முதலிய பாதைகளை நிவர்த்திக்கவும், அதை சுத்தமாக வைத்திருக்கவும் கடமைப்பட்டிருக்கிறான். அதற்கு மேல் அவனால் தடுக்க முடியாமல் அந்த உடம்புக்கு ஏற்படும் பாம்புகடி, மரணம் முதலிய பெருத்த விஷயங்களில் அவன் என்ன செய்ய முடியும்? அதற்கு மேல் அவன் கடவுளுடைய அருளை எதிர்பார்த்திருந்து, வருவதை அனுபவிப்பதைத் தவிர அவன் செய்யக்கூடியது வேறொன்றும் இல்லை ஆகையால், நான் இன்றைய தினம் என்னைப் பாம்புகள் கடித்த பிறகு என் உடம்பை கவனிக்காமலேயே இருந்து வருகிறேன். மருந்துகள் சாப்பிட வேண்டும் என்றும், மாந்திரீகத்தினால் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்றும் ஜனங்கள் தொந்தரவு செய்வார்கள் என்று நினைத்து நான் கதவை மூடி உள்பக்கம் தாளிடச் செய்து படுத்துக் கொண்டிருக்கிறேன். யாராவது கேட்டால், வைத்தியர்கள் இருந்து மருந்துகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லும்படி சொல்லி எச்சரித்து வைத்திருக்கிறேன். அதுதான் உண்மையான சங்கதி” என்று மிகவும் நிதானமாகவும் தட்டித் தடுமாறியும் கூறினார்.

அதைக் கேட்ட கண்ணப்பா, வடிவாம்பாள் ஆகிய இருவரது தேகமும் பதறியது. மனம் துடித்தது. கண்களில் இருந்து கண்ணிர் பொங்கி வழிந்தது. இருவரும் தமது வஸ்திரத் தலைப்பால்