பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

மாயா விநோதப் பரதேசி

கந்தசாமி:- (சந்தோஷமாகப் புன்னகை செய்து) நான் இன்னொரு மாதிரியாக எண்ணுகிறேன். ஆதிகாலத்தில் நம்முடைய முன்னோர்கள் வடக்கில் உள்ள ஹிமாலயப் பர்வதத்தில் ஏறியே அப்பால் உள்ள தேசங்களுக்கு எல்லாம் போக்குவரத்து வைத்துக் கொண்டிருந்தார்கள். ஆகையால், அதற்கு அப்பால் இருந்தவர்களை எல்லாம், கந்தர்வர்கள் என்றும், அவுனர்கள் என்றும் (அயோனியர்), அசுரர்கள் என்றும், தேவர்கள் என்றும் சொல்லி இருக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன். ஹிமாலயப் பர்வதம் ஆகாயத்தைத் தொட்டுக் கொண்டிருப்பதால் அதன் மேல் ஏறிப் போவதை ஆகாய லோகத்துக்கு ஏறிப்போவதாக மதித்திருக்கலாம். அந்தத் தேவர்களிடத்தில் மனிதருடைய மூப்பு பிணிகளை எல்லாம் நீக்கி சிரஞ்சீவியாக்கும் தேவாமிருதம் இருந்ததாகச் சொல்லி இருக்கிறார்கள் அல்லவா. ஒருவேளை இந்த ஜெர்மனி தேசத்தாரே அந்தத் தேவர்களாக இருந்திருக்கலாம். அவர்களிடம் ஆகாய விமானங்கள் தேவாமிருதம் முதலியவை இருந்திருக்கலாம். தேவாமிருதம் முதலில் அவ்விடத்தில் இருந்து நடுவில் இல்லாமல் போய் இப்போது மறுபடியும் அங்கே உண்டாகலாம் அல்லவா. அந்தத் தேசத்திற்குப் போகும் வழியில் உள்ள பாரசீக தேசத்திலும், காக்கேசியாவிலும் உள்ள ஸ்திரீகள் எல்லோரும் அழகில் நிகரற்றவர்கள் என்று நம்முடைய பூகோள சாஸ்திரம் சொல்லுகிறது அல்லவா இந்தத் தேசத்தவர்கள் தான் நம்முடைய புராணத்து அப்ஸர ஸ்திரீகளாகவும் கந்தர்வ ஸ்திரீகளாகவும் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நம்முடைய அருச்சுனன், சந்தனு முதலியோர் தெய்வ லோகத்துக்குப் போய், தேவேந்திரனுக்குச் சண்டையில் உதவி செய்திருப்பதாகப் புராணங்கள் சொல்லுகின்றன. ஐரோப்பாவில் உள்ள ரோமாபுரிச் சரித்திரத்தில் அந்தத் தேசத்தை ஆண்ட சில சக்கரவர்த்திகளிடம் இந்திய மன்னர்கள் விருந்தினராகப் போய் வந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் ஒத்திட்டுப் பார்த்தால், நம்முடைய முன்னோர்கள் ஐரோப்பா கண்டத்தில் உள்ள வெள்ளையரையே தேவர்கள் என்றும், அசுரர்கள் என்றும் பலவாறாக மதித்து வந்தனர் என்பது தெரிகிறது. தவிர,