பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282

மாயா விநோதப் பரதேசி

முகத்தை மூடிக்கொண்டு தேம்பித் தேம்பி அழத் தலைப்பட்டனர். வடிவாம்பாள் கலங்கி உருகி அழுத வண்ணம் நிரம்பவும் பணிவாகப் பேசத் தொடங்கி, “சுவாமிகளே இந்தச் சமயத்தில் தாங்கள் இப்படி வேதாந்தம் பேசுவதைக் கேட்க, எங்களுக்குச் சகிக்கவே இல்லை. மனிதர் தம்முடைய சுய அனுமதியும் சம்மதமும் இல்லாமல் கடவுளின் செயலால் பிறக்கிறார்கள் என்பது நிஜமாய் இருந்தாலும், பிறந்த பிறகு ஒரு மனிதனுக்கும், மற்றொரு மனிதனுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லாமல் எல்லோரும் தனித்தனியாக இருந்து இறந்து போனால், அதைப் பற்றி மற்றவர் விசனம் பாராட்டமாட்டார்கள். மனிதன் பிறந்த பிறகு அவன் மற்ற சில மனிதரை அன்னியோன்னியமாக பாவிப்பதும், அவர்களும் பரஸ்பரம் அவனை நேசிப்பதும் ஏற்படுகின்றன. மனிதனை உற்பத்தி செய்த கடவுள் அன்பு, வாத்சல்யம், பாசம், சிநேகம், பாந்தவ்வியம் முதலிய குணங்களையும் அவனிடம் ஏற்படுத்தி, ஒருவரோடு ஒருவர் சம்பந்தப்பட்டு வாழ்ந்து ஒருவருக்கு ஒருவர் உதவியாகவும், ஒருவரால் மற்றவர் நன்மைகளையும் சுகங்களையும் அடைகிறவர்களாகவும் அமைத்து வைத்திருக்கையில், ஒருவரிடத் தொருவர் சொந்தமும் உரிமையும் கொண்டாடுவது ஒழுங்கல்ல என்றும், அதனால்தான், மனிதன் விசனிப்பதைக் கண்டு கடவுள் இரக்கங் கொள்வதில்லை என்றும் தாங்கள் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. மனிதனைக் கடவுள் சிருஷ்டிக்கும் போதே, அவனுடன்கூட, முதலில் உடல் அபிமானம், உறவபிமானம், பொருளபிமானம் ஆகிய மூன்றையும் உற்பத்தி செய்தனுப்புகி றாரே. அதாவது, மனிதன் பிறந்த முதலே, எப்பாடுபட்டாவது தன்னுடைய உடம்பையும் உயிரையும் ஊட்டி வளர்த்துக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற தடுக்க முடியாத ஒரு பேரவா அவனிடம் இயற்கையிலேயே இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக, தாய் என்றும், தகப்பன் என்றும், சகோதரன் சகோதரி என்றும், சிநேகிதர் என்றும் ஒருவிதமான பாசமும், வாஞ்சையும் அவனது மனதில் உண்டாகின்றன. பிறகு மண் பொன் பெண் என்ற பொருளாசை ஏற்படுகிறது. இப்படி இயற்கையிலேயே அவனுடைய மனசில் இப்படிப்பட்ட மூன்று