பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

284

மாயா விநோதப் பரதேசி

களிப்படைந்து சுயேச்சையாகக் கெட்ட காரியங்களைச் செய்து உலகத்தாரை இம்சிக்கவும் விடுத்துத் தாங்கள் உலகை நீத்துப் போவது நியாயமாகுமா? தங்களைக் கொண்டு உலகத்தோருக்குப் பெருத்த நன்மைகளைச் செய்து வைக்க வேண்டும் என்று கடவுள் திருவுளம் பற்றித் தங்களை சிருஷ்டித்து அனுப்பி இருக்க, அப்படிப்பட்ட அரிதினும் அரிதான தங்களுடைய உயிரைத் தாங்கள் கேவலம் திரணமாக மதித்து இப்படிப்பட்ட மகா அபாயகரமான சந்தர்ப்பத்தில், தேகத்தை அசட்டையாகப் போட்டிருப்பது சரியல்ல. எப்படியாவது தாங்கள் வைத்தியம் செய்து கொண்டுதான் ஆகவேண்டும். முக்கியமாக எங்களைக் கருதியாவது தாங்கள் தங்களுடைய உயிரைத் தப்ப வைத்துக் கொள்ள வேண்டும். தாங்கள் இல்லாவிட்டால், நம்முடைய எதிரிகள் எங்கள் எல்லோரையும் ஒரு நிமிஷத்தில் அழித்து நாசப்படுத்தி விடுவார்கள். தாங்களே ஏற்றிவைத்த விளக்கைத் தாங்களே அனைத்து விடலாமா? எல்லாவற்றையும் அறிந்த தங்களுக்கு நான் அதிகமாக எடுத்துச் சொல்வதற்கு அச்சமாக இருக்கிறது. நாம் இப்போது தாமதித்திருக்கும் ஒவ்வொரு விநாடி நேரமும் நிரம்பவும் அபாயகரமானது. நான் போய் வைத்தியர் களை அழைத்து வரட்டுமா?” என்று நிரம்பவும் உருக்கமாகவும் பணிவாகவும் கூறி வேண்டிக் கொண்டான்.

அவர்கள் இருவரும் கூறிய சொற்களை திகம்பர சாமியார் தமது கண்களை மூடியபடியே கேட்டுக் கொண்டிருந்தார். கண்ணப்பா பேசி முடித்தவுடன், அவர் மறுபடியும் மெதுவாகப் பேசத் தொடங்கி, “தம்பி கண்ணப்பா குழந்தை வடிவூ! நீங்கள் இருவரும் மகா புத்திசாலிகள். நீங்கள் தவறான விஷயங்களை ஒருநாளும் சொல்லக் கூடியவர்களே அன்று. நீங்கள் இப்போது சொன்ன நியாயங்கள் எல்லாம் ஒருவிதத்தில் நியாயமானவைகள் தான் ஆனாலும், ஒரு விஷயம் இருக்கிறது. எத்தனையோ ஆயிரம் ஜனங்களுக்கு நான் நன்மை செய்வதாகவும், ஏராளமான துஷ்டர்களை அடக்கி இருப்பதாகவும் சொல்லி, அதற்காக நான் இறக்காமல் இருக்க வேண்டும் என்று சொல்லுகிறீர்களே! இன்று நான் மருந்து சாப்பிட்டு இந்த அபாயத்தில் இருந்து தப்பித்துக்