பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

292

மாயா விநோதப் பரதேசி

எவ்விதமான குணத்தையும் நடத்தையையும் எதிர்பார்க்கிறார் என்பதையும் எல்லா மனிதரும் சுலபத்தில் தெரிந்து கொள்ளும்படியாக அவர் ஏன் செய்திருக்கக்கூடாது? மனிதன் தன்னுடைய பாவச் செய்கைகளுக்குத் தகுந்தபடி புதிய ஜென்மங்களை எடுத்துத் துன்பங்களை அனுபவித்துக் கொண்டே போகிறான் என்று நாம் நினைக்கிறோம். மற்ற மதத்தினர் வெவ்வேறு விதமாக நினைக்கின்றனர். எப்படி இருந்தாலும், கடவுள் மனிதனை முதன் முதலாகப் படைக்கும் போதே, அவன் சகலமான நற்குணங்களும் பொருந்தி ஒழுங்கான வழியில் நடக்க வேண்டும் என்ற சங்கற்பத்தை உண்டாக்கி அவனைப் படைத்திருந்தால், அவன் ஏன் துன்மார்க்கங்களில் சென்று பாவக் கிருத்தியங்களைச் செய்கிறான்? எல்லாவற்றையும் அறிந்த கடவுள், மனிதன் காலக்ரமத்தில் இப்படிக் கெட்டுப் போவான் என்பதை நினைக்கமலா மனிதருக்கு ஆரம்பத்தில் சுயேச்சாதிகாரத்தைக் கொடுத்துப் படைத்தார்? இதற்கு ஜனங்கள் திருப்திகரமான சமாதானம் சொல்ல மாட்டாமல், இதைக் கடவுளின் லீலா விநோதம் என்ற அழகான சொல்லால் சுலபமாக மறுமொழி சொல்லிவிடுகிறார்கள். அண்ட பகிரண்டங்களை எல்லாம் இச்சாமாத்திரத்தில் படைத்துக் காத்து அழிக்க வல்ல அபாரசக்தி வாய்ந்த கடவுள், மனிதன் பேராசை, பொறாமை, கோபம், பகைமை, அகங்காரம் முதலிய துர்க்குணங்களைப் பெருக்கி, உலகத்தில் அக்கிரமங்கள் செய்வதையும், அதற்காக மறு ஜென்மங்களில் துன்பப்படுவதையும் பார்த்து சந்தோஷப்படுவதை லீலா விநோதமாக வைத்துக் கொண்டிருக்கிறார் என்றால், அப்படிப்பட்ட கடவுளின் மனப்போக்கையும், பெருந்தன்மையையும் என்ன்வென்று சொல்லுகிறது. ஆகவே, கடவுளின் சிருஷ்டி அரை குறையான தாகவும், குற்றங்குறைபாடுகளுக்கு இலக்கானதாகவும் தோன்றுகிறது. இந்தக் குறையை நிவர்த்திக்கக் கூடிய அவதார புருஷன் ஒருவன் தோன்றும்படி கடவுள் செய்ய வேண்டும். அப்பேர்ப்பட்ட அவதாரப் புருஷன் எந்தக் காலத்தில் தோன்றுகிறானோ அப்போது தான் இந்த உலகம் க்ஷேமப்படும். அவன் உண்மையிலேயே கடவுளின் பிரதிநிதி என்பது சகலமான மதஸ்தருக்கும், பலவகைப்பட்ட கொள்கையை உடையவருக்கும் இயற்கையிலேயே தெரிய வேண்டும். எல்லோரையும் படைக்கும் கடவுள் எங்கே இருக்கிறார் என்பதையும், மனிதருக்கு