பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

295

கொடுங்கள். உடனே நான் இதற்குத் தக்க மனிதரை அழைத்து வைத்தியம் செய்யச் சொல்லுகிறேன். தெய்வத்தின் திருவருளை முன்னிட்டு நாம் நம்மால் ஆன முயற்சிகளை எல்லாம் செய்து பார்த்து விடுவோம். இதுவரையில் தாங்கள் இந்த உலக விஷயங்களில் ஈடுபட்டு துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனஞ் செய்து வந்து, இந்த அபாயகரமான வேளையில் தங்களுடைய கொள்கையை மாற்றி இப்படிப்பட்ட பெருத்த விரக்தியை உண்டாக்கிக் கொண்டு, பாம்பின் விஷம் தங்களுடைய உடம்பில் பரவும்படி விட்டிருப்பதைக் காண, எங்களால் கொஞ்சமும் சகிக்க முடியவில்லை. தங்களுடைய பிராணனுக்கு அபாயம் நேரும் பட்சத்தில், வயசான என் தகப்பனார் அதைத் தாங்கமாட்டாமல் இறந்து போய்விடுவார் என்பது நிச்சயம். அதன் பிறகு என் தாயார் பிழைத்திருப்பது சந்தேகம். இத்தனை பேரையும் இழந்த பிறகு நாங்களும் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொள்ள வழி தேட வேண்டுமே அன்றி, எங்களால் இப்படிப்பட்ட பெருத்த விசனத்தைத் தாங்கவே முடியாது. தன் சொந்தத் தகப்பனாரைவிட தங்களை ஆயிரம் மடங்கு விசேஷமாக மதித்து உயிருக்குயிராக எண்ணியிருக்கும் நம்முடைய வடிவாம்பாள் தங்களுடைய உயிருக்கு ஏதாவது அபாயம் நேர்ந்து விடும் பட்சத்தில், அதன் பிறகு தண்ணீர்கூட அருந்தாமல் அதே விசனத்தில் கிடந்து தன் உடம்பைச் சித்திரவதை செய்து தன்னை வெகு சீக்கிரத்தில் கொன்று கொள்வாள். எங்களை எல்லாம் தவிர, இன்னும் தங்களுடைய சம்சாரம் இருக்கிறார்கள். அவர்கள் முன் தடவை தங்களை விட்டுப் பிரிந்து பட்டயாடுகள் எல்லாம் தங்களுக்குத் தெரியாதவை அல்ல. மறுபடி தங்களை இழக்க நேருமானால், அவர்களும் உயிர் வாழமாட்டார்கள் என்பது நிச்சயம். தங்களுடைய உயிரைத் தாங்கள் காலத்துக்கு முன் மாய்த்துக் கொள்ளும் பாவத்தோடு, இத்தனை பேரையும் கொன்ற பழியும் தங்களைத்தான் வந்து சுற்றும். ஏதடா இவன் நம்மிடம் இவ்வளவு தூரம் துணிந்து பேசுகிறானே என்று தாங்கள் நினைப்பீர்கள். தாங்கள் என்மேல் எவ்வளவுதான் கோபித்துக் கொண்டாலும் பாதகமில்லை. இந்த அபாயகரமான சந்தர்ப்பத்தில் நான் உண்மையை எடுத்துச் சொல்லாமல் இருக்க முடியவில்லை” என்று மிகவும் இளக்கமாகவும் நடுக்கத்தோடும் கூறினான்.