பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

298

மாயா விநோதப் பரதேசி

சேருவார்கள் என்று நினைக்கிறேன். இந்த பங்களாவில் அதிக அடைசலே இல்லையே! பாம்பு எங்கிருந்து கடித்தது? ஒரே காலத்தில் நாலைந்து பாம்புகள் கடிக்கும்படியான நிலைமை எப்படி ஏற்பட்டது? அப்படிக் கடித்திருக்கையில், தாங்கள் மருந்தே சாப்பிடவில்லை என்கிறீர்களே! விஷகடியினால் ஏற்படும் மயக்கம் எப்படி விலகியது? இந்த விவரங்களை எல்லாம் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது. தயை செய்து சொல்ல வேண்டும். இந்த அறையின் தாழ்ப்பாளைத் திறந்துவிட்ட தங்கள் மனைவியார் எங்களோடு பேசாமல் எங்கேயோ போய் விட்டார்கள். அதன் காரணமும் இன்னதென விளங்கவில்லை. தயை கூர்ந்து எல்லாவற்றையும் சொல்ல வேண்டுகிறேன்” என்றான். சாமியார் சந்தோஷமாகப் புன்னகை செய்து நாற்புறங்களிலும் தமது பார்வையைச் செலுத்தி நிரம்பவும் தணிவான குரலில் பேசத் தொடங்கி, “தம்பி பயப்பட வேண்டாம்; என்னைப் பாம்புகள் கடிக்கவில்லை. ஓர் எண்ணத்தை மனசில் வைத்துக் கொண்டு நான் இப்படிப்பட்ட விபரீதச் செய்தி ஊரில் பரவும்படி செய்திருக்கிறேன். உண்மையிலேயே நாலைந்து நாகப் பாம்புகள் கூடி ஒரு மனிதனைக் கடிக்குமானால், அவனுடைய பிராணன் அதே நிமிஷத்தில் போய்விடாதா? மருந்தாவது மந்திரமாவது! அதெல்லாம் நாகப் பாம்பின் விஷத்துக்கு முன் நிற்குமா என்ன? வரியன் முதலிய மற்ற பாம்புகளின் விஷமானால், மருந்து முதலிய சிகிச்சைகளைக் கொண்டு நிவர்த்திக்கலாம்” என்றார். அவர் கூறியதைக் கேட்டவுடன் கண்ணப்பா, வடிவாம்பாள் ஆகிய இருவரது மனதையும் அபாரமாக அழுத்தி வதைத்துக் கொண்டிருந்த பெருத்த ஆவலும், கவலையும், துயரமும், சஞ்சலமும் ஒரு நொடியில் விலகின. அவர்களது மனம் சந்தோஷப் பெருக்கினால் பூரித்துப் பொங்கியது. முகம் மலர்ந்து இனிமையாக மாறியது. உடனே வடிவாம்பாள் அளவற்ற மகிழ்ச்சியோடு பேசத் தொடங்கி, “சுவாமி எங்களுக்கெல்லாம் இப்போது தான் உயிர் வந்தது. இந்தச் சங்கதியை நாம் நம்முடைய மனிதர்களுக்கு எல்லாம் ரகசியமாக உடனே சொல்லி அனுப்புவது நல்லதென்று நினைக்கிறேன். இந்த அரை நாழிகை சாவகாசத்திற்குள் எங்களுடைய மனம் பட்டபாடு அந்தக் கடவுளுக்குத் தான் தெரியும். அதுபோலவே, அவர்களும் விசனமும் கவலையும்