பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

299

கொண்டு பதறிப்போய் இங்கே ஒடி வருவார்கள் ஆகையால் நம்முடைய மனிதர்களுக்கு உடனே ஓர் ஆளை அனுப்பலாம்” என்றாள்.

சாமியார், “உஸ், ஒங்கிப் பேசாதே! ஒருவேளை யாராவது கதவிற்கு வெளியில் வந்திருந்து நாம் பேசுவதைக் கேட்டாலும் கேட்பார்கள். நான் உங்களிடம் வெளியிட்ட ரகசியம் வேறே எவருக்கும் தெரியக்கூடாது. உங்கள் இருவருடைய தாய் தகப்பனார்களுக்கு நாமே ரகசியத்தில் இதைத் தெரிவிக்க வேண்டும். ஆளிடம் இதைச் சொல்லி அனுப்பினால் அவன் ஒரு வேளை இதை வேறே யாரிடமாவது சொல்லி விடுவான். அதில் இருந்து விஷயம் நெடுகப் பரவிவிடும். நீங்கள் இந்தச் செய்தியைக் கேட்டு உண்மை என்று நம்பி எப்படி இங்கே ஓடி வந்தீர்களோ, அது போலவே, உங்கள் தாய் தகப்பன்மார்களும் தவித்துக் கொண்டு ஓடி வரவேண்டும். அப்போதுதான் ஜனங்கள் எல்லோருக்கும் இது உண்மை போல இருக்கும். நம்மவர்கள் உள்ளே வந்தவுடன் நாமே நேரில் சங்கதியைச் சொல்லிக் கொள்ளலாம். இந்தக் கதவுக்கு வெளியில் இருந்து உங்களுக்குத் தகவல் தெரிவித்த வேலைக்காரிக்குக்கூட உண்மை தெரியாது. என் சம்சாரம் ஒருத்திக்கும், உங்களுக்கும்தான் தெரியும். நீங்கள் எல்லோரும் கொஞ்ச காலத்திற்கு மிகவும் எச்சரிப்பாக நடந்து கொள்ள வேண்டும். ஜாக்கிரதை" என்றார்.

கண்ணப்பா:- சரி. தங்களுடைய பிரியப்படியே எல்லா விஷயமும் நடக்கட்டும். நாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தாங்கள் விரும்புகிறீர்களோ, அது போலவே நாங்கள் நடந்து கொள்ளத் தடையில்லை. முக்கியமாக பாம்புகளின் விஷயம் முற்றிலும் பொய்யானது போதுமானது.

சாமியார்:- பாம்புகளின் விஷயம் முற்றிலும் பொய்யல்ல. அவைகள் என்னைக் கடித்தது என்ற விஷயம் மாத்திரம் பொய். மற்றபடி நான் இன்றைய தினம் தப்பிப் பிழைத்தது மாத்திரம் புனர்ஜென்மந்தான்.

கண்ணப்பா:- (திடுக்கிட்டு) ஆ! அப்படியா உண்மையில் தங்களை இன்று பாம்பு கடிக்க இருந்ததா?

சாமியார்:- பாம்பு என்று ஒருமையாக ஏன் சொல்லுகிறீர்கள்? பாம்புகள் என்று சொல்லுங்கள். .