பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

301

இல்லாவிட்டால் இந்நேரம் நான் மாண்டு போயிருப்பேன். இப்போது நான் தப்பிப் பிழைத்ததைப் பற்றிக்கூட நான் அவ்வளவாக சந்தோஷப்படவில்லை. என் விஷயத்தில் சும்மா இருக்கமாட்டார்கள். உங்களுக்கெல்லாம் கெடுதல் செய்ய நினைத்து ஏதாவது உபாயம் தேடி இருப்பார்கள். நீங்கள் எல்லோரும் அதில் இருந்து தப்பி கூேழ்மமாய் இருக்க வேண்டுமே என்ற கவலையே இப்போது என் மனசை அடியோடு கவர்ந்து கொண்டிருக்கிறது. நீங்கள் எல்லோரும் கொஞ்ச காலம் எங்கேயாவது மறைவாக இருந்து, அவர்களுடைய சதியாலோசனையில் அகப்படாமல் தப்பித்துக் கொள்வதே உசிதமான காரியம் என்று நினைக்கிறேன்.

கண்ணப்பா:- (திடுக்கிட்டு ஆ என்ன ஆச்சரியம்! நம்முடைய எதிரிகள் பாம்புகளைப் பிடித்துத் தங்களுடைய பங்களாவில் கொண்டுவந்து விட்டார்களா? அப்படியும் செய்வதுண்டோ?

சாமியார்:- அப்படிச் செய்திருந்தால், பாதகமில்லையே! அவர்கள் நிரம்பவும் தந்திரமாகக் காரியங்களைச் செய்திருக்கிறார்கள். இன்று காலையில் நான் வழக்கப்படி ஸ்நானம் செய்து பூஜை முதலிய நித்திய கர்மாநுஷ்டானங்களை முடித்துவிட்டு இன்றைய தினம் காலையில் வந்த தபால்களை எல்லாம் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் வெளியில் இருந்த ஒரு ஜெவான் உள்ளே வந்து தஞ்சை போலீஸ் சூப்பரின்டெண் டெண்டு கும்பகோணத்தில் இருந்து ஓர் ஹெட்கான்ஸ்டேபில் வசம் கொடுத்தனுப்பி இருப்பதாக ஒரு கடிதத்தையும், ஒரு சிறிய பார்சலையும் கொடுத்தான். அந்தக் கடிதம் கெட்டியான ஒர் உறைக்குள் போடப்பட்டிருந்தது. அந்த உறை நன்றாக ஒட்டப் பட்டிருந்ததன்றி, அது போலீஸ் சூபரின்டெண்டெண்டின் கச்சேரியில் உபயோகிக்கப்படும் உறையாகவே இருந்தது. அதோடு வந்த பெட்டி நல்ல கெட்டியான காகிதத்தால் சுற்றப்பட்டு உயர்ந்த டொயின் கயிற்றால் கட்டப்பட்டிருந்தது. அதன் மேல் அரக்கு முத்திரை காணப்பட்டது. அந்த அரக்கு முத்திரையின் மேல் இருந்த எழுத்துகள் நன்றாகத் தெரியவில்லை. அவைகளைப் பார்த்தவுடன், கும்பகோணத்தில் இருந்து வந்த ஹெட்கான்ஸ்டேபிலை நேரில் பார்த்து அவனிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று.