பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

308

மாயா விநோதப் பரதேசி

கொள்வார்கள். ஆகவே, நான் இப்போது அவர்களுக்குப் பெருத்த ஜென்மத் துரோகியும் பகைவனுமாய் விட்டேன் என்றும், என்னை உயிரோடு ஒரு நிமிஷமும் வைக்கக்கூடாது என்றும் அவசியம் நினைத்து, என்னை எப்படியாவது கொன்றுவிட வேண்டும் என்று அவர்கள் வேறே பலவகையில் அவசரமான முயற்சிகள் செய்வார்கள். என்னைப் பாம்புகள் கடித்துவிட்டன என்ற செய்தியைப் பரப்பிவிட்டால், அது அவர்களுக்கும் எட்டும். அவர்கள் திருப்தி அடைந்து, என்மேல் கத்தி தீட்டுவதை அவ்வளவோடு நிறுத்திவிடுவார்கள். நான் என்னைக் காப்பாற்றிக் கொள்ளும் விஷயத்தில் அதிகமாக என் கவனத்தையும் பொழுதையும் செலவிடாமல் நான் என் வேலையைப் பார்க்கலாம் அல்லவா? அதற்காகத்தான் நான் இந்த யுக்தி செய்தேன்.

கண்ணப்பா:- இது நல்ல யுக்திதான். ஆனால் பாம்புகள் கடித்து விட்டன என்று சொல்லிக் கொண்டு, தாங்கள் எத்தனை நாள்கள் உள்ளே இருக்க முடியும்? -

வடிவாம்பாள்:- இவர்கள் எப்போதும் உள்ளே இருக்கப் போகிறார்களா? பாம்புகள் கடித்துவிட்டன என்றும், மருந்துகள் பிரயோகிக்கப்படுகின்றன என்றும், இன்னம் உடம்பு தேற வில்லை என்றும் எல்லோரும் சொல்லிக் கொள்ளும்படி செய்து விட்டு, ரகசியமாக வெளியில் போய் இவர்கள் தங்கள் அலுவல்களைப் பார்ப்பார்களோ என்னவோ. அப்படிச் செய்வதுகூட அபாயகரமானதுதான். சுவாமிகள் வெளியில் போகாமல் வீட்டிலேயே இருப்பதுதான் உசிதமான காரியம் எனத் தோன்றுகிறது.

சாமியார்:- நான் அவர்களுக்குப் பயந்து வெளியில் போகாமல் எத்தனை நாளைக்குத் தான் ஒளிந்து கொண்டிருக்க முடியும். அப்படி இருந்தாலும், எதிரிகளுக்கு ஒரு விதமான அவநம்பிக்கை உண்டாகும். நாகப்பாம்புகள் கடித்தால், மனிதர் உடனே இறந்து போவார்களேயன்றி, நெடுநாள்கள் படுத்திருப்பது வழக்கமில்லை. மற்ற சாதாரணப் பாம்பு கடித்தால் அதற்கு மாதக் கணக்கில் வைத்தியம் செய்கிறதுண்டு. அப்படிப்பட்ட பாம்பினால் கடிக்கப் பெற்ற மனிதர் வீட்டிலேயே படுத்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால், அதை ஜனங்கள்