பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

312

போல நிரம்பவும் அழகாய் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சுவர்களில் படங்களும், கண்ணாடி விளக்குகளும், மான்முகம் முதலிய அலங்காரப் பொருட்களும் காணப்பட்டன. தரை முழுதும் பிரப்பம் பாயினால் மூடப்பட்டு இருந்தது. அதன்மேல் நாலைந்து பளபளப்பான நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. வெளியில் இருந்து காற்று உள்ளே வருவதற்காக அமைக்கப்பட்டிருந்த ஒரு ஜன்னலண்டை ஒரு பெரிய கட்டில் காணப்பட்டது. அதன் மேல் கனமான பஞ்சு மெத்தை, தலையணைகள், கொசுவலை, அஸ்மானகிரி முதலியவை பொருத்தப் பெற்றிருந்தன. அவைகளைப் பார்த்த உடனே கண்ணப்பாவின் மனதில் பெருத்த சந்தேகம் ஒன்று தோன்றியது. சாமியார் உலக சுகத்தை எல்லாம் துறந்து துறவி போல இடுப்பில் ஒரு சிறிய வஸ்திரத்தை மாத்திரம் அணிந்து சொற்ப ஆகாரம் உண்டு தரையில் துணியை விரித்து இரவு காலத்தைப் போக்குகிற சுபாவம் உடையவர் என்று அவன் பல நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தான். அதற்கு மாறாக அந்த இடத்தில் ஒரு பெருத்த சீமானுடைய சயன மாளிகை போல இருந்த ஏற்பாடுகள் எல்லாம் தோன்றவே, சாமியார்கூட அப்படிப்பட்ட சிற்றின்ப சுகங்களை நாடுகிறாரா என்ற சந்தேகம் பலமாகத் தோன்றியது. அவ்வாறு அவன் சந்தேகித்த வண்ணம் முதலில் செல்ல, அவனுக்குப் பின்னால் வடிவாம்பாள் சென்றாள். கட்டிலின் மேல் யாரோ ஒரு மனிதர் படுத்திருப்பது போன்ற நீளமான புடைப்பு நன்றாகத் தெரிந்தது. அந்தப் புடைப்பின் மேல் ஒரு பெரிய துப்பட்டி போட்டு மூடப்பட்டிருந்தது. உண்மையில் யாரோ மனிதர் அங்கே படுத்து, துப்பட்டியால் தலை முதல் கால் வரையில் மூடிக் கொண்டிருப்பது போல இருந்தது. அவர்கள் இருவரும் திடுக்கிட்டு, கட்டிலில் படுத்திருப்பது யாராக இருக்கும் என்று சிந்தனை செய்தவராய், சந்தடி செய்தால், படுத்திருப்பவருக்கு அது உபத்திரவமாக இருக்குமே என்று நினைத்து இரண்டொரு நிமிஷ நேரம் ஒய்ந்து அப்படியே நின்றனர். அந்த இடத்திற்குத் தங்களை என்ன கருத்தோடு சாமியார் அனுப்பி இருப்பார் என்ற யோசனை கண்ணப்பாவின் மனதில் தோன்றியது.

முதல் பாகம் நிறைவடைந்தது