பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

மாயா விநோதப் பரதேசி

கோபாலசாமி:- கைம்பெண்கள் வசிக்கும் அந்தப் பெரிய கட்டிடத்திற்கு முன்னால் ஒரு குறித்த இடத்தில், வெள்ளை நிறமுள்ள ஒரு பீடன் வண்டியில் யாரோ ஒரு பெரிய மனிதர் வந்து எப்போதும் நின்று, அந்தக் கட்டிடத்தின் இரண்டாவது உப்பரிகையைப் பார்த்துக் கொண்டே இருந்ததாக நாரதர் என்பவர் கதை எழுதியிருந்தது உனக்கு நினைவில்லையா?

கந்தசாமி:- பெரிய மனிதர் வந்து நின்றால், அவர் கெட்ட எண்ணத்தோடுதான் நிற்கிறார் என்று நாம் சொல்லிவிட முடியுமா? ஒரு வேளை அந்த இடத்தில் இனிமையான காற்று உண்டாகலாம்? அல்லது, அவர் அருமையாக மதித்துள்ள யாராவது கைம்பெண் அவ்விடத்தில் இருக்கலாம். அவர் ஒவ்வொரு நாளும் தமது வண்டியில் கடற்கரைக்கு வந்து போகும் போது, ஏன் அந்தப் பெண்ணையும் பார்த்து விட்டுப்போகக் கூடாது? அவர் எவ்வித துர்நினைவும் இல்லாமல், தினந்தினம் வந்து அங்கே நின்று தமது மனிதரைப் பார்த்துவிட்டுப் போவதில், என்ன குற்றம் இருக்கிறது? இதை எல்லாம் நாம் காதிலேயே வாங்குவது சரியல்ல. உலகம் பலவிதம், வெளிப்பார்வைக்கு ஒரு விதமாகத் தோன்றும் விஷயம் உண்மையில் முற்றிலும் வேறுவிதமாக இருக்கும். எப்போதும் நாம் வெளித் தோற்றத்தைக் கொண்டே எதையும் நிச்சயிப்பது அநேகமாய்த் தவறாகத்தான் முடியும்.

கோபாலசாமி:- (வேடிக்கையாகச் சிரித்துக் கொண்டு) நூற்றில் ஒரு பேச்சு. ஏது நீ அந்தப் பெரிய மனிதருக்கு இவ்வளவு தூரம் பரிந்து பேசுகிறது? அவர் உன்னைத் தன் கட்சிக்கு வக்கீலாக நியமித்து இருக்கிறாரா? நாம் இப்போது அந்தக் கட்டிடத்தின் பக்கத்தில் வந்து முடியும் ஐஸ்ஹவுஸ் ரோட் வழியாகத்தானே வந்தோம். பாலத்துக்கு அப்பால் இருந்து வரும் காற்று எப்படி இருக்கிறதென்று பார்த்து அனுபவித்தோம் அல்லவா. அது தான் நரகலோகம் என்று நீயே சொன்னாய். நம்முடைய பெண் குழந்தைகளை இப்படிப்பட்ட துர்நாற்றமுள்ள இடத்தில் வசிக்கச் செய்திருக்கிறார்களே என்று நீ தானே சொன்னாய். இப்போது பெரிய மனிதர் அவ்விடத்தில் வரும் நல்ல காற்றைக் கருதி அங்கே