பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

மாயா விநோதப் பரதேசி

ஜென்மத்தைப் படைத்து, இவ்வளவு நுட்பமான அறிவையும், எந்தக் காரியத்தையும் நிறைவேற்றும் அபார சக்தியையும் மனிதருக்கு அமைத்திருக்கிறார். இந்தப் பொன்னும் வெள்ளியும் கடவுளுக்கு ஒரு துரும்புக்குச் சமம். ஆதலால், அது எங்கே இருந்தால், அவருக்கு அதைப் பற்றி என்ன சிந்தை? கோடாது கோடியாக நிறைந்திருக்கும் மனிதர்களை இந்த வீண் வேலைக்காகவா படைத்திருக்கிறார்? என்னுடைய வீட்டில் உள்ள ஒரு பண்டம் கூடத்தில் இருந்தாலும், என்னுடையதுதான், அறைக்குள் இருந்தாலும் என்னுடையது தான். அதுபோல என் வீட்டில் இருக்கும் தங்கமும் கடவுளுடைய சிருஷ்டிக்குள் தான் இருக்கிறது. இன்னாருடைய வீட்டிற்குள் இருக்கும் தங்கமும் கடவுளுடைய சிருஷ்டிக்குள் தான் இருக்கிறது. அதைப்பற்றி கடவுளுக்கு ஏதாவது கவலையுண்டா, அல்லது, நினைவு தான் இருக்குமா? ஒன்றும் இராதென்றே நினைக்கிறேன். அப்படி இருக்க, மனிதர் தம்முடைய ஆயிசு காலத்தை எல்லாம் பூர்த்தியாக இதிலேயே விரயம் செய்து அழிந்து போகிறார்களே என்ற நினைவு தான் கொஞ்சகாலமாக என் மனசில் வந்து வந்து வருத்திக் கொண்டிருக்கிறது.

கோபாலசாமி:- (மகிழ்ச்சியாகப் புன்னகை செய்து) ஏதப்பா! நீ எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போய் பெருத்த வேதாந்த விசாரணையில் இறங்கிவிட்டாய். நீ பெரிய கோடீசுவரன். உனக்கும் பசி என்பது கிடையாது. போதாக்குறைக்கு உனக்கு ஜில்லா கலெக்டருடைய ஏகபுத்திரி எஜமானியாக வரப் போகிறாள். அவளும் உன்னுடைய கோடிக்குத் துணையாக இன்னொரு கோடி ரூபாயாவது கொண்டு வருவாள். நீ வெள்ளியையும் தங்கத்தையும் எவ்வளவு தான் இழிவுபடுத்திப் பேசினாலும், அவை உன்னிடம் மேன்மேலும் வந்து சேர்ந்து கொண்டே தான் இருக்கும். நீ எவ்வளவு வேண்டுமானாலும் வேதாந்தம் பேசலாம். எங்களைப் போன்ற ஏழைகள் எல்லாம் என்ன செய்கிறது. கடவுள் எங்களுடைய வயிற்றில் பசியென்ற ஒர் அடங்காப்பிசாசை வைத்திருக்கிறார். இந்த உலகத்தில் அமபாரம் அம்பாரமாக தானியங்களும், தின்பண்டங்களும், பழவகைகளும் உண்டாகும்படி கடவுள் செய்திருக்கிறார்