பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

13

இருக்கிறது. அவர்கள் எல்லோரும் ஒரு நாள் செய்தது போலத் தங்களுடைய ஆயிசு காலம் முடிய உழைத்துத்தான் தங்களுடைய பசியை ஆற்றிக் கொள்ள நேருகிறது. இப்படி அவர்கள் தங்களுடைய ஆயிசு காலம் முழுதையும் தங்கள் வயிற்றை நிரப்புவதற்காகவே வீணாக்க நேருகிறதே. இது யாருடைய குற்றம்? அவர்களுடைய குற்றமா? அவர்களுடைய முன்னோர் ஏழ்மை நிலைமையில் இருந்தது குற்றமா? அல்லது, உலகத்தில் எல்லோரும் சொத்துகளைத் தம் தமது என்று பங்கு போட்டுக் கொண்டதனால் ஏற்பட்ட உரிமைச் சட்டங்களின் குற்றமா? அல்லது, கடவுள் எல்லாவற்றையும் சிருஷ்டித்து, எல்லோரையும் சமமான செல்வம் உடையவராக் அமைக்காமல் வலியோர் எளியோருக்கில்லாமல் எல்லாவற்றையும் அபகரித்துக் கொள்ளும்படி விட்டு ஏற்றத் தாழ்வுகளை வைத்திருக்கிறார் என்று அவர் மேல் குற்றம் சுமத்துகிறதா? இதெல்லாம் பெரிய விஷயம். கந்தசாமி:- ஏழை மனிதர்களுடைய ஆயிசுகாலம் எல்லாம் வயிற்றுப் பிணியைத் தீர்ப்பதற்காக அழிகிறதைப் பற்றி நான் அவர்கள் பேரில் குறைகூறவில்லை. ஏராளமான செல்வத்தை வைத்துக் கொண்டிருக்கிறவர்கள் மேன்மேலும் பணத்தாசையாகிய பேய் பிடித்து ஏன் உழன்று தங்களுடைய ஆயிசு காலத்தை வீணாக்க வேண்டும் என்ற கருத்தோடல்லவா நான் பேசுகிறேன்.

கோபாலசாமி:- அது ஒருவிதத்தில் உண்மைதான். ஆனால் இந்த உலகத்தில் கொஞ்சமாகப் பணம் வைத்திருக்கிறவனை விட அதிகமாகப் பணம் வைத்திருக்கிறவனுக்கே ஜனங்கள் அதிகமான மரியாதையும், கெளரதையும் கொடுக்கிறார்கள். இப்போது உன்னுடைய உதாரணத்தையே எடுத்துக்கொள். உன்னுடைய சொந்த ஊராகிய மன்னார்குடியில் இன்னம் எத்தனையோ மிராசு தார்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் சாப்பாட்டுக்குக் குறை வில்லை. இந்த ஊர் கலெக்டர் உங்கள் ஊரில் டிப்டி கலெக்டராக இருந்த காலத்தில் மற்ற மிராசுதார்கள் எல்லோரும் அவரிடம் வந்து பழகித்தான் இருப்பார்கள். அப்படி இருந்தும், அவர் அந்த ஊரை விட்டுப் பல ஊர்களுக்கு மாற்றலாகி கடைசியில் பெரிய கலெக்டர்