பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

37

ஒன்றுக்கும் உபயோகமற்றவர்களாய் அழகாய் உட்கார்ந்திருக்கும் சித்திரப் பதுமைகள் நமக்குத் தேவையில்லை. நான் எனக்கு அப்படிப்பட்ட பெண் தான் வேண்டும் என்று ஆதியில் இருந்து எங்கள் அம்மாளிடத்தில் சொல்லி வந்திருக்கிறேன். அப்படி இருந்தும் அவர்கள் எனக்கு இந்தக் கலெக்டருடைய பெண்ணை நிச்சயித்திருக்கிறார்கள். அந்தப் பெண் பி.ஏ. வகுப்பில் படிக்கிறாள் என்பதைக் கேட்கும்போதே, எனக்கு அவள் மேல் ஒருவித வெறுப்பு உண்டாகிறது. அந்தப் பட்டம் அவளுடைய யோக்கியதையைக் குறைப்பதாக என் மனசில் ஒருவித உணர்ச்சி தோன்றுகிறது. அவளை நானும் பார்க்கவில்லை; என் தாய் தகப்பனாரும் பார்க்கவில்லை என்றே நினைக்கிறேன். உத்தியோக பிரமையினால், அவர்கள் மதிமயங்கி, இதற்கு இணங்கி இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். அவளுக்குத் தாயும் இல்லை. அவளும், படித்த மேதாவி ஆகையால், இது உண்மையான பற்றும் பாசமும் இல்லாத கலியாணமாக முடியும் என்று நினைக்கிறேன். எங்களிடம் உள்ள செல்வத்தைக் கருதி அவர் பெண்ணைக் கொடுக்கிறார். என் தாய் தகப்பனார் அவர் பெரிய கலெக்டர் என்பதைக் கருதி அந்தப் பெண்ணைக் கொள்கிறார்கள். ஆகையால் இது ஐசுவரியம், பெரும் பதவியைக் கலியாணம் செய்கிறதேயன்றி, கந்தசாமியும் மனோன்மணியும் பொருத்தமான சதிபதிகள் தானா என்பதை அறிந்து செய்யும் கலியாணமாகத் தோன்றவில்லை. ஆனால், எந்த விஷயத்தையும் என் தாய் தகப்பனார் நன்றாக ஆழ்ந்து யோசனை செய்து எப்போதும் செய்கிறது வழக்கம். அதுவுமன்றி என் அண்ணனும் அண்ணியும் என்மேல் அந்தரங்கமான பிரியம் வைத்தவர்கள். இப்போது முக்கியமான எல்லாக் காரியங்களையும் அவர்கள் தான் பார்த்துச் செய்கிறார்கள். என்னுடைய அண்ணி தன்னைப் போலவே சகலமான குணங்களும் வாய்ந்த நல்ல பெண்ணாகப் பார்த்து எனக்குக் கட்ட வேண்டும் என்று பல தடவைகளில் சொல்லிக் கொண்டிருந்தாள். அவர்கள் எல்லோரும் கலந்து யோசனை செய்து முடித்திருக்கும் இந்த ஏற்பாட்டில் அதிக கெடுதல் இருக்கா தென்றே நினைத்து நான் என் மனசை ஒருவிதமாகச் சமாதானப் படுத்திக் கொண்டிருக்கிறேன்.