பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

மாயாவிநோதப் பரதேசி

எப்போதும் நான் மூத்தோர் சொல்லை மீறி ஆட்சேபித்தே வழக்கமில்லை. எப்படிப்பட்ட தலைப் போகிற விஷயமாக இருந்தாலும், அவர்கள் சொல்லுகிறபடிதான் நான் நடக்க வேண்டும்.

கோபாலசாமி:- ஒகோ! அப்படியானால் சரிதான். உன்னுடைய எஜமானியம்மாளுடைய பெயர் மனோன்மணி அம்மாளா? பெயர் அழகாகத் தான் இருக்கிறது. குணமும் நல்லதாக இருக்கலாம்.

கந்தசாமி:- பெயரிலிருந்து மனிதருடைய குணாகுணங்களை நாம் எப்படி நிச்சயிக்கிறது; அது முடியாத காரியம். விலை மாதரான தாசிகள் ஜானகி என்றும், சாவித்திரி என்றும் கற்பிற்கரசிகளின் பெயரை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அமங்கலிகள் கலியாணியம்மாள் மங்களத்தம்மாள் என்ற பெயர்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கூலி வேலை செய்யும் ஒட்டச்சி தொம்பச்சிகள் எல்லாம், பாப்பாத்தி என்றும், துரைஸானி என்றும், ராஜாத்தி என்றும் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கன்னங் கரேலென்று கருப்பாய் இருப்பவள் சுவரணம்மாள் என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கிறாள். புருஷனோடும், மற்றவரோடும் ஓயாமல் சண்டையிடும் ராக்ஷஸ குணம் வாய்ந்த ஸ்திரீகள் புஷ்பவல்லி என்ற மிருதுவான பெயரை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெயரிலிருந்து தாம் எதையும் கண்டுபிடிக்க முடியாது.

கோபாலசாமி:- அது வாஸ்தவந்தான். எப்படியாவது இந்த சம்பந்தம் நல்லதாக முடியவேண்டும். எல்லா விஷயங்களிலும் ஈசுவரன் ஒரு குறைவுமில்லாமல் உன்னை மகோன்னத் ஸ்திதியில் வைத்திருக்கிறார். இந்த விஷயத்திலும் குறைவு வைக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

கந்தசாமி:- நான் அப்படி நினைக்கவில்லை. எப்பேர்ப்பட்ட மனிதருக்கும் ஒருவிதமான குறை இருந்தே திரும். இந்த உலகத்தில் சகலமான பாக்கியங்களும் சம்பூர்ணமாக வாய்ந்து கவலை விசனம் முதலிய துன்பமே இல்லாத நிஷ்களங்கமான சந்தோஷம் அனுபவித்து இறந்த மனிதரே இருந்ததில்லை