பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

39

அல்லவா. ஆகையால், எனக்கு மற்ற எல்லா விஷயங்களிலும், கடவுள் குறைவில்லாமல் வைத்திருப்பதால், இந்த விஷயத்தில் மாத்திரம் குறை வைத்து விடுவாரோ என்ற அச்சமும் கவலையும் என் மனசில் தோன்றுகின்றன.

கோபாலசாமி:- அநேகமாய் அப்படி நடக்காது. அல்லது கடவுளின் திருவுள்ளம் அப்படி இருக்குமானால், அதை நாம் தடுக்க முடியாது. அதனால் தான், எந்த விஷயத்திலும் உன்னுடைய நன்மையே கோரும் உன் தாய் தகப்பனார் முதலியோரும் இந்த விஷயத்தில் ஏமாறிப்போய் இருக்கலாம். எப்படி இருந்தாலும் பாதகமில்லை; கடவுளாகப் பார்த்து அவரவருடைய யோக்கியதையை மதித்து, அவரவருக்கு எது தக்கதென்று ஏற்படுத்துகின்றாரோ அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்வதே நல்லது. நமக்கு ஒரு கெடுதல் நேர்ந்து விட்டால், அதைக் கெடுதல் என்று பாராட்டி அதைப்பற்றி விசனப்படாமல், அதுவும் ஒரு நன்மைதான் என்ற திடசித்தத்தோடும், சந்தோஷத் தோடும், அதை ஏற்றுக் கொண்டால், அந்தக் கெடுதலின் உபத்திரவத்திலும் சுமையிலும் முக்கால் பாகத்துக்கு மேல் குறைந்து தோன்றும் என்பது கைகண்ட விஷயம். அம்மாதிரி தான் விவேகிகள் நடந்து கொள்வார்கள். இருக்கட்டும்; இப்போதும் ஒன்றும் முழுகிப் போகவில்லை. உனக்கு எவ்விதக் கெடுதலும் உண்டாகி விடவில்லை. கெடுதல் நேர்ந்து விடுமோ என்று நினைத்து நல்ல மனசை நீ ஏன் இப்போதிருந்தே வருத்திக் கொள்ள வேண்டும். கடவுள் நமக்கு எப்போதும் நன்மையையே செய்வார் என்று தியானம் செய்து கொண்டேயிரு. எல்லாம் நன்மையாகவே முடியும்; எல்லாவற்றிற்கும் உங்கள் மனிதராவது அந்தப் பெண்ணை ஒரு தடவை நேரில் பார்ப்பது உசிதம் என்று நினைக்கிறேன்.

கந்தசாமி:- நிச்சயதார்த்தத் தன்று தான் எல்லோரும் வரப் போகிறார்களே; அப்போது பார்த்துக் கொள்ளட்டுமே.

கோபாலசாமி:- அது தான் தவறு. இந்த விஷயங்களை எல்லாம் முன்னால் முடித்துக் கொள்ள வேண்டும். நிச்சயதார்த்தத்திற்கு இவர்கள் சகல முஸ்தீபுகளுடனும் இருப்பார்கள்.