பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

மாயாவிநோதப் பரதேசி

வகுப்பு வரையில் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டியதற்கு அவ்வளவு விஷயம் என்ன இருக்கிறது? உபயோகமற்ற அநாவசியமான இங்கிலீஷ் புஸ்தகங்களை எல்லாம் படிப்பதில், இங்கிலீஷ் புஸ்தக வியாபாரிகள் பணக்காரர் ஆகிறார்கள். நம்முடைய பெண்களில் கண்களும், மூளையும், தேகமும், நற்குணமும் கெடுகின்றன. இவைகள் தான் கைகண்ட பலன்கள். நாம் போய் அந்தக் கலெக்டருடைய பெண்ணைப் பார்ப்பதும் ஒன்றுதான்; பார்க்காமல் இருப்பதும் ஒன்றுதான். அவள் எப்படி இருப்பாள் என்பது எனக்கு ஏற்கனவேயே ஒருவாறு புலப்பட்டு விட்டது.

கோபாலசாமி:- அப்படியானால், நாம் எதையும் பார்க்காமல், குருட்டுத்தனமாகவா இப்படிப்பட்ட முக்கியமான காரியத்தை நிறைவேற்றுகிறது? நீ பேசுகிறது வேடிக்கையாக இருக்கிறதே. முதல் பார்வையில் பெண்களின் குணாகுனங்கள் தெரியா தென்று நீ சொல்வது ஒருவிதத்தில் உண்மைதான். அப்படியானால், வெள்ளைக்காரர் செய்வதைப் போல பெண்ணையும் பிள்ளையையும் கொஞ்ச காலம் ஒன்றாகப் பழகவிட்டு, ஒருவர் குணம் ஒருவருக்குப் பிடிக்கிறதா என்று பார்த்துச் செய்வது ஒருவேளை உன் மனசுக்குப் பிடிக்கும் போலிருக்கிறது.

கந்தசாமி:- (ஏளனமாகச் சிரித்து) சேச்சே! அதைப் போல மூடத்தனம் வேறே எதுவுமில்லை. அந்த ஒரு விஷயத்தில் தான் வெள்ளைக்காரர் ஞானசூன்யராக இருக்கிறார்கள். பக்குவகாலம் அடைந்த ஒரு யெளவன ஸ்திரீயையும், ஒரு விட புருஷனையும் தனியாகப் பேசிப் பழகும்படி விடுவது, பஞ்சையும் நெருப்பையும் ஒன்றாகச் சேர்த்து வைப்பது போன்றதல்லவா. அப்படிச் சேராவிட்டால், அந்தப் பெண்ணினிடத்தில் உண்மையிலேயே ஆயிரம் கெடுதல்கள் இருந்தாலும், பையனுக்கு அவனுடைய புதிய மோகத்தில், அத்தனை கெடுதல்களும் அத்தனை அழகுகள் போலப் புலப்படும். ஆனால், அவர்கள் இருவருக்கும் தேக சம்பந்தம் நேரிட்டு காரியம் கெட்டுப் போன பிறகு அவன் அவளுடைய துர்க்குணங்களை எல்லாம் உணர்ந்து அவளை வெறுப்பானே அன்றி, அதற்கு முன் உணரவே மாட்டான்.