பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

மாயாவிநோதப் பரதேசி

அவர்கள் சிற்றின்ப மோகத்தில் ஒருவாறு குற்றத்தை மற்றவர் உணராமல் கொஞ்ச காலம் கழிப்பார்கள். புது மோகம் தீர்ந்த பிறகு, குற்றங்கள் ஒன்றுக்கு ஆயிரம் பங்காகப் பெருகித் தோன்றி, அவர்கள் மனசில் ஆயிசுகால பரியந்தம் தீரா விசனத்தையும் வேறுபாட்டையும் உண்டாக்கும் என்பது நிச்சயம். ஆகையால் வெள்ளைக்காரர் செய்வது போல விடபுரு ஷர்களும் புத்தியறிந்த பெண்களும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும்படி விடுவதைப் போன்ற பெருந்தீங்கு வேறே எதிலுமில்லை. இவ்வளவு தூரம் பேசும் நானே இந்தக் கலெக்டருடைய மகளோடு கூட இருந்து கொஞ்ச காலம் பழகுவதாக வைத்துக் கொள்வோம்! அவளிடத்தில் உண்மையிலேயே அநேகம் கெடுதல்கள் இருந்தால் கூட, அவளை நான் அடையும் வரையில் அவற்றை எல்லாம் அவ்வளவாகப் பாராட்ட மாட்டேன். அவளிடம் ஆயிரம் குறைபாடுகள் இருந்தாலும், அவளையே கலியாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற உறுதியும் மன இளக்கமும் ஏற்பட்டுவிடும். ஆகையால், அவளுடைய குணத்தை நாம் இப்போது ஆராய்ந்து பார்ப்பது சாத்தியம் இல்லாத காரியம். இதற்காகத் தான் நம்முடைய முன்னோர்கள் ஜாதகத்தின் மூலமாக இருவரது பொருத்தங் களையும் பார்க்கிறார்கள். அதுவுமன்றி, வதுாவரர்களுடைய தாய் தகப்பனாருடைய குணாகுணங்களையும் நடத்தையையும், அவர்கள் எப்படிப்பட்ட வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் கவனித்துச் செய்கிறார்கள். அந்தக் குறிப்பு அநேகமாய்ச் சரியாகவே முடிகிறது. தாயைத் தண்ணிர்த் துறையில் பார்த்தால், பெண்ணை வீட்டில் போய்ப் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்பார்களே. அது சரியான வார்த்தையல்லவா.

கோபாலசாமி:- (சிரித்துக் கொண்டு) என்ன, கந்தசாமி! நீ எந்த வழிக்கும் வராமல் இப்படிக் குளறிக்கொண்டே போனால், இதை எப்படித் தான் நிர்ணயிக்கிறது? எந்த வழியும் உனக்குச் சரிப்பட வில்லை, அப்படியானால், ஒன்றையும் பார்க்காமலேயே கலியாணத்தை நடத்தி விடலாமா? அறவடித்த முன்சோறு, கழனீர்ப் பானையில் விழும் என்று சொல்வார்கள்; அதுபோல இருக்கிறது உன் காரியம். நீ எல்லா விதத்திலும் ஆட்சேபம் சொல்லுகிறாய்.