பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

51

இடைஞ்சல்கள் இருக்கின்றன. அவர் கலெக்டர். ஆகையால் வாசலில் டபேதார்களும், டலாயத்துகளும் ஏராளமாகக் காவல் காத்திருப்பார்கள். பெண் பங்களாவில் தனியாக இருக்கையில், அன்னிய புருஷனாகிய உன்னை அவர்கள் உள்ளேவிட மாட்டார்கள். நீ இன்னான் என்று நிஜத்தை வெளியிட்டால், அப்போது அவர்கள் உள்ளே போய், அந்தப் பெண்ணினிடம் சங்கதியைத் தெரிவிப்பார்கள். நீ உடனே உள்ளே போகலாம். பெண் உனக்கெதிரில் வராமல் உள்ளேயே இருந்து கொண்டு, பங்களாவில் உள்ள டெலிபோன் மூலமாகத் தகப்பனாரைக் கூப்பிட்டு நீ வந்திருக்கும் செய்தியைத் தெரிவிப்பாள். அவர் உடனே கச்சேரியை விட்டுப் புறப்பட்டு வந்து விடுவார். அப்போதும் உன்னுடைய கருத்து நிறைவேறாது.

கந்தசாமி:- அவர் கச்சேரிக்குப் போகும் போது அந்தப் பெண் அநேகமாய் இந்தக் கலாசாலைக்கு வந்துவிடுவாள். வராமல் இருந்தாலும் நீ சொல்லுகிறபடி தகப்பனாரை உடனே வரவழைத்து விடுவாள். அப்படி எல்லாம் நாம் செய்வது சரியல்ல. நான் மாத்திரம் போவதாக எனக்கு உத்தேசமில்லை. உன்னையும் கூடவே அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்று நினைக்கிறேன்.

கோபாலசாமி:- (நிரம்பவும் ஆச்சரியமடைந்து) என்னடா கந்தசாமி! நீ நிஜமாகவே பேசுகிறாயா? அல்லது, என்னோடு விளையாடுகிறாயா? நானும், உன்னோடுகூட வந்தால்தான் என்ன? நீ தனியாகப் போகும்போது என்ன நடக்குமோ, அது தானே நாம் இருவரும் போகும் போதும் நடக்கும்.

கந்தசாமி:- (கபடமாகப் புன்னகை செய்து) உன்னை நான் சாதாரணமாக அழைத்துக் கொண்டு போகப் போகிறேன் என்று நினைக்கிறாயா? இல்லை. உன்னை எனக்கு எஜமானாக்கி அழைத்துக் கொண்டு போகப் போகிறேன்.

கோபாலசாமி:- என்ன, கந்தசாமி! மூடி மூடிப்பேசுகிறாயே. சங்கதியை நன்றாகத்தான் சொல்லேன். நீ ஏதாவது தந்திரம் செய்யப் போகிறாயா? உண்மையை என்னிடம் சொல்ல, இவ்வளவு யோசனை என்ன?