பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

55


2-வது அதிகாரம்
கலகவிலாசம்—கட்டியக்காரன் பிரவேசம்

றுநாட் காலை சுமார் எட்டு மணி சமயம். மன்னார் கோவிலில் அழகான ஒரு பெரிய மாளிகையின் கூடத்தில் போடப்பட்டிருந்த வழுவழுப்பான கருங்காலி விசிப்பலகையின் மேல் அந்த மாளிகையின் சொந்தக்காரரும், அந்த ஊரின் பிரபல மிராசுதாரருமான வேலாயுதம் பிள்ளை உட்கார்ந்து தமது கையில் இருந்த தாயுமானவர் பாடலில் ஏதோ ஒரு பாடலின் அர்த்தத்தைத் தமது மனதிற்குள்ளாகப் படித்துக் கொண்டிருக்கிறார். அவரது வயது சுமார் நாற்பத்தைந்துக்குக் குறையாதென்றே சொல்ல வேண்டும். உடம்பு செழுமையாகவும் பருமனாகவும் சிவப்பு நிறமானதாகவும் இருந்தது. அவர் அதிகாலையிலேயே ஸ்நானம் செய்து தமது இடுப்பில் உயர்வான பட்டுக்கரை உடையதும் தும்பைப் பூவிலும் அதிக வெளுப்பானதுமான பத்து முழ வேஸ்டியை வைதிகப் பிராம்மணர் போலப் பஞ்சகச்சமாக அணிந்து, நான்கு மூலைகளிலும் சிட்டைகள் உடையதுமான மாசு மறுவற்ற துல்லியமான பழுர்த்துண்டு ஒன்றைத் தமது வலது தோளின் மீது போட்டிருந்தார். அவரது முகத்தில் மீசை காணப்படவில்லை. நெற்றி கழுத்து மார்பு கைகள் முதுகு முதலிய இடங்களில் விபூதிப் பட்டைகள் பளிச்சென்று பிரகாசித்துக் கொண்டிருந்தன. நெற்றியில் விபூதி பட்டையின் நடுவில் இரண்டனா அகலத்தில் சந்தனப் பொட்டு, நிஷ்களங்கமான ஆகாய வட்டத்தில் அப்போதே முளைத்தெழும் சந்திரன் போலத் திட்டப் பெற்றிருந்தது. அவரது கழுத்தில் தங்கக் குவளைகள் கட்டப்பட்ட உருத்திராகூ மாலை அணியப் பெற்றிருந்தது. தாம் கையில் வைத்துப் படித்துக் கொண்டிருந்த திருப்பாடலினிடம் அதிக மதிப்பும் மரியாதையும் வைத்தவர் என்பதை, அவர் தமது கால்களைக் கீழே தொங்கவிடாமல், பலகையின் மேலேயே சப்பணங்கோலி உட்கார்ந்து புஸ்தகத்தைப் படித்த மாதிரியே எளிதில் தெரிவித்தது.